பாபநாசம்- முன் தீர்மானங்களை முறியடித்த படம்
- IndiaGlitz, [Saturday,July 04 2015]
மற்ற மொழிகளில் வெற்றியும் பாராட்டுகளையும் பெற்ற படங்கள் தமிழில் அதே இயக்குனரால் ரீமேக் செய்யப்படுவது பொதுவாக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும். அதுவும் அந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் தலைமகன்களில் ஒருவராகக் கருதப்படும் கமல ஹாசன் நடித்தால் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது.
மலையாளத்தில் சக்கைபோடுபோட்ட த்ருஷ்யம் படம் தமிழுக்கு வருகிறது என்றும மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கப் போகிறார் என்றும் அதில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஏற்ற பாத்திரத்தை தமிழில் கமல் ஏற்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் எல்லைகளைக் கடந்தது.
ஆனால் த்ருஷ்யம் படத்தின் தமிழ்ப் பதிப்பான பாபநாசம் படத்தின் பயணத்தில் வரவேற்புணர்வும் நேர்மறை எதிர்பார்ப்புகளும் மட்டும் இருக்கவில்லை. 2014ல் தொடங்கி ஒரு ஆண்டுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் இந்தப் படம் அளவுக்கு சமீப காலங்களில் வேறெந்தப் படமும் எதிர்மறை எண்ணங்களாலும் அவை சார்ந்த ஊகங்களாலும் சூழப்பட்டதில்லை.
பாபநாசம் ஜூலை 3,வெள்ளிக்கிழமை அன்று வெளியான,சில மணிநேரங்களில் பல்வேறு மூலைகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. ரசிகர்களும் விமர்சகர்களும் இந்தப் படத்தைக் கொண்டாடிவருகிறார்கள்.
எவையெல்லாம் படத்துக்கு பாதகமாக இருக்கும் என்று ஒரு சிலரால் கருதப்பட்டதோ அவையெல்லாம் படத்துக்கு சாதகமாக மட்டுமல்லாமல் சிறப்பம்சமாகவும் அமைந்திருக்கும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது பாபநாசம்.
அவற்றுள் சிலவற்றை நம் வாசகர்களுக்குத் தருகிறோம்
கமல்தான் தெரிவார்…ஜார்ஜ்குட்டி அல்ல
யார் சிறந்த நடிகர்- கமலா? மோகன் லாலா? என்ற விவாதத்துக்கு முடிவே இருக்க முடியாது. சினிமாவின் அசலான காதலர்கள், இருவருமே இந்திய சினிமாவின் பொக்கிஷங்கள் என்று ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் கமல் கலைத் தாகத்தின் விளைவாய், தன் பிரத்யேக பாணியின் உந்துதலால் தான் நடிக்கும் படங்களின் அனைத்து துறைகளிலும் தலையிடுவார் என்ற நம்பிக்கையின் காரணமாக த்ருஷ்யம் படத்தின் மையப் பாத்திரமான ஜார்ஜ் குட்டியின் இயல்பை நீர்த்துப் போகச் செய்துவிடுவார் என்ற கருத்து நிலவியது. சிலர் தமிழ்ப் பதிப்பில் கமல்தான் தெரிவாரே தவிர ஜார்ஜ் குட்டி அல்ல என்று கூட சொன்னார்கள்.
ஆனால் பாபாநாசம் படத்தில் பட்டறிவும் அக்கறையும் மிக்க நடுத்தர, நடுவயதுக் குடும்பத் தலைவன் சுயம்புலிங்கமாக கமலின் நடிப்பை அனைவரும் கொண்டாடுகிறார்கள். பல மணிநேர மேக்-அப் உள்ளிட்ட உடலை வருத்தும் மெனக்கெடல்கள் இல்லாமல் கமல் நடித்த இந்தப் பாத்திரம் அண்மைய ஆண்டுகளில் அவரது ஆகச் சிறந்த நடிப்பாகப் பாராட்டப்படுகிறது. இந்தப் படத்தில் கமலின் பங்களிப்பு நடிப்பில் மட்டுமே என்பதால் கடந்த பத்தாண்டுகளில் ஒரு நடிகராக கமலின் ஆகச் சிறந்த படமாக பாபாநாசம் படத்தை குறிப்பிடலாம் என்று சில முன்னணி திரைப்பட விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்குக் காரணம் சுயம்புலிங்கத்துக்கும் ஜார்ஜ் குட்டிக்கும் இடையில் உருவாக்கப்பட்ட சில நுண்ணிய வேறுபாடுகள்தான்.. மோகன் லாலின் பாத்திரம் அமைதியும் நிதானமும் நிறைந்தது. கமல் ஏற்ற பாத்திரம் சற்று உணர்ச்சியவயப்படுபவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் சுவைக்குப் பொருந்துவதற்காகவும் கமல் பாணி நடிப்பின் சிறப்பியல்புகளைப் பயன்படுத்தவும் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சுயம்புலிங்கம். நடந்த உண்மையை சூசகமாக வெளிப்படுத்தும் காட்சியில் இது சிறப்பாக கைகொடுத்திருக்கிறது.
சுயம்புலிங்கத்தை ஜார்ஜ்குட்டியின் மறுபதிப்பு என்று சொல்வதைவிட கதையின் தன்மைக்கும் சூழலுக்கும் பொருந்துகிற ஆகச் சரியான மாற்று என்று சொல்லலாம். இருவருக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு. இவற்றை ஏற்படுத்தியதற்காக இயக்குனர் மற்றும் எழுத்தாளர் குழுவுக்கு சிறப்புப் பாராட்டு வழங்கலாம்.
இப்போது எதற்கு ரீமேக்?
கமல் ஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்லாமல் அவரது திரை எழுத்து மற்றும் இயக்குனர் திறன்களுக்காகவும் பல ரசிகர்களைக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர் ஒரு ரீமேக் படத்தை ஏன் கையிலெடுக்க வேண்டும். என்று சிலர் கருதினர். அவரது மந்திரக்கை படாத கதைகள் நிறைய இருக்கின்றனவே என்ற ஆதங்கத்தின் விளைவு அது.
மறுபுறம் கமலின் முந்தைய ரீமேக் படமான உன்னைப்போல் ஒருவன் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதோடு அதன் இந்திப் பதிப்பான எ வெட்னெஸ்டே படத்தில் நசீருதீன் ஷாவின் நடிப்பு கமலின் நடிப்பைவிட சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் கூறினர்.
ஆனால் பாபநாசம், கமல் நடித்தவற்றில் மிகச் சிறந்த ரீமேக் படம் என்று பாராட்டப்படுகிறது. இது வரை தமிழில் ரீமேக் ஆகி வந்த படங்களில் மிகச் சிறந்தைவைகளில் ஒன்றாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்தத் திரைக்கதை தமிழுக்குப் பொருந்துமா?
த்ருஷ்யம் த்ரில்லர் வகைப் படம்தான் என்றாலும் முதல் பாதி சற்று மெதுவாக நகரும். கதைநாயகனின் பாத்திரத்தை (அவன் படிக்காதவன் என்றாலும் புத்திசாலி, சிக்கனமானவன் ஆனால் கஞ்சனல்ல, தீவிர சினிமா ரசிகன்) அழுத்தமாகப் பதிவுசெய்ய திரைக்கதையில் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். பின்பாதியில் அவன் தன் வீட்டில் கொலை நடந்ததற்கான ஆதாரங்களை புத்திசாலித்தனமாக அனைவரது பார்வையிலிருந்தும் மறைப்பது நம்பகத்தன்மையுடன் அமைய இது அவசியமாக இருந்தது. தவிர படம் முழுவதும் பார்வையாளரின் சிதறாத கவனத்தைக் கோரும் படம் இது. இது போன்ற படங்கள் தமிழ் ரசனைக்கு பொருந்தாது என்று சிலர் சந்தேகித்தனர்.
ஆனால் ஒரு நல்ல திரைக்கதை சிறப்பாக திரையில் அரங்கேற்றப்பட்டால் எப்படிப்பட்ட பார்வையாளரையும் ஈர்த்துவிடும் என்பதை மீண்டும் ஒருமுறை நீரூபித்திருக்கிறது பாபநாசம். திரையரங்குகளில் படம் பார்க்கும்போது தொடக்கக் காட்சிகளில் ஸ்மார்ட்ஃபோன்களை நோண்டிக்கொண்டிருந்தவர்கள் கூட பிரதான கட்டம் வந்தவுடன் புலன்களைத் திரையிலிருந்து விலக்கவில்லை.
மூன்று மணிநேரமா…யாருக்குப் பொறுமை இருக்கிறது?
பாபநாசம் படம் ஓடும் நேரம் 181 நிமிடங்கள் என்ற செய்தி வந்ததும் பலரது எதிர்வினை இப்படித்தான் இருந்தது. இத்தனைக்கும் மலையாள த்ருஷ்யம் இதைவிட 17 நிமிடங்கள் குறைவு. கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு மற்றும் கன்னடப் பதிப்புகள் 154 மற்றும் 150 நிமிடங்களே.
இப்படியிருக்க ஒரு படத்தை 180 நிமிடங்களுக்கா எடுப்பது? அதுவும் குறைந்த நீளம் கொண்ட படங்கள் அதிகமாக நாடப்படும் இந்தக் காலத்தில்? என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் பாபநாசம் படத்துக்கு ஜீத்து ஜோசப் எழுதிய தொய்வற்ற திரைக்கதை நீளத்தை ஒரு குறையாக அமையவிடவில்லை. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் சற்று குறைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் விமர்சித்தாலும் அது அந்த காட்சிகளின் தேவை பற்றிய விமர்சனம்தானே தவிர படத்தின் ஒட்டுமொத்த நீளம் குறித்ததல்ல. 'படம் முடிந்த பின் மூன்று மணிநேரம் ஆகிவிட்டதா என்று வியந்தோம்' என்பதே பெருவாரியான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் மலையாளத்தில் இல்லாத சில காட்சிகளையும் விளக்கங்களையும் தமிழில் வைத்திருப்பது (உதாரணம்- சுவாமிஜி கதாபாத்திரம்),படத்தின் அதிக நீளத்தை நியாயப்படுத்துகிறது.
தெரியாத வழக்கு?
தமிழ்ப் படங்களில் வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுவது புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் 'தமிழ்த் திரையில் மதுரை வட்டார வழக்கு மட்டும்தான் ஒலிக்கிறது' என்று விமர்சிக்கும் அளவுக்கு அவ்வழக்கு பயன்படுத்தப்பட்டது.
அந்த அளவுக்கு இல்லை என்றாலும் நெல்லை வட்டார வழக்கும் சில படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதுபோன்ற பெரும்பாலான படங்களில்ஏலே, போலே', வாவே, போவே' உள்ளிட்ட பயன்பாடுகள் மட்டுமே கையாளப்பட்டன. ஆனால் நெல்லை வட்டார வழக்கு இதுபோன்ற பொதுப்பார்வை சார்ந்த புரிதல்களுடன் சுருங்கிவிடுவதில்லை. அது கடல் அளவு சொல்லாடல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது.
வசனகர்த்தா ஜெயமோகன் மற்றும் நடிகர்களுக்கு வட்டார வழக்கு பயிற்சி கொடுத்த சுகா ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். நெல்லை வட்டார வழக்கு பெருமளவில் அசலாகக் கையாளப்பட்டிருக்கிறது. (இந்தப் படத்தில் நெல்லைக்கு அருகில் உள்ள கடற்கரை கிராமமான உவரி வட்டார வழக்கைப் பயன்படுத்தியிருப்பதாக ஜெயமோகன் தெளிவுபடுத்தியுள்ளார்).
படத்தின் டீசர்கள் வெளியானபோது வட்டாரக் கலப்பற்ற மொழிப் பிரயோகத்துக்குப் பழக்கமான பெருநகரப் பார்வையாளர்களுக்கு இந்தப் படம் அந்நியமாகத் தோன்றும் என்று சிலர் விமர்சித்தார்கள். .மேலும் மணி ரத்னம் இயக்கத்தில் இதே போன்ற வட்டார வழக்கு பயன்படுத்தப்பட்ட கடல் படம் தோல்வி அடைந்ததையும் சிலர் சுட்டிக்காடினார்கள்.
ஆனால் பாபநாசம் படத்தில் வட்டார வழக்கு புரியவில்லை என்றோ அந்நியமாக இருப்பதாகவோ யாரும் விமர்சிக்கவில்லை. இந்தப் படத்தின் வெற்றி நட்சத்திர மதிப்பு கொண்ட படங்களில் வட்டார வழக்கு சரியாகப் பயன்படுத்தப்படும் போக்கைத் தொடங்கிவைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கவுதமியா? ஏன் மீனா இல்லை?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபநாசம் படத்தில் கவுதமி நடிக்கிறார் என்றவுடன் பலர் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் மலையாளத்தில அதே வேடத்தை ஏற்றிருந்த மீனாவையே இந்தப் படத்திலும் போட்டிருக்கலாமே என்று சிலர் குறை கண்டுபிடித்தனர்.
படத்தின் டீசர்களில் கவுதமி வயது முதிர்ந்தவராகத் தெரிவதாக சிலர் விமர்சித்தார்கள்.
ஆனால் 1990களில் தென்னகத்தின் நான்கு மொழிகளிலும் முன்னனி நடிகையாக விளங்கிய கவுதமி யாருக்கும் சளைத்தவரல்ல என்று நிரூபித்துள்ளார். கனவுகள் நிறைந்த இல்லத்தரசியாகவும் பாசமிக்க அம்மாவாகவும் சரியாகவே நடித்திருக்கிறார். காட்சிக்கேற்ற முகபாவங்களையும் உணர்ச்சிகளையும் சரியாக வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள்.
படத்தில் கமல்-கவுதமிக்கு இடையிலான காதல் காட்சிகள் சற்று அதிகமாக இருப்பதாக சிலர் விமர்சிக்கிறார்களே தவிர கவுதமியை நடிக்கவைத்ததை யாரும் குறை சொல்ல முடியவில்லை.
மொத்தத்தில் பாபநாசம் குவித்திருக்கும் பாராட்டுகளும் அதற்குக் கிடைக்கப் போகும் வணிக வெற்றியும் நமக்கு நிரூபிப்பது ஒரு திரைப்படத்தை முன் தீர்மானங்களுடன் அணுகக் கூடாது என்பதையும் ஒரு கலைஞன் தன் திரைவாழ்வில் எந்தக் காலகட்டத்தில் வேண்டுமானாலும் மிகச் சிறப்பாக வெளிப்பட முடியும் என்பதையும்தான்..