இந்த விலங்கிலிருந்துதான் கொரோனா வைரஸ் வந்திருக்கிறது..! அறிக்கை விட்ட ஆராய்ச்சியாளர்கள்.
- IndiaGlitz, [Friday,March 27 2020]
நம் ஊர்களில் எறும்புண்ணி என்று அழைக்கப்படும் ஒருவகை அழுங்கிலிருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது ஒரு ஊர்வன வகை பாலூட்டியாகும். தன் தோலின் மேல் கடுமையான செதில்களைக் கொண்டது என்றாலும் இது மனிதர்களையோ மற்ற விலங்குகளையோ தக்காது. தன்னை காத்துக் கொள்ள பந்து போல சுருண்டு கொள்ளும் ஒரு அப்பாவி விலங்கு. பார்ப்பதற்கு பெரிய அணில் போல இருக்கும் இந்த விலங்கு தனது கூர்மையான நகங்களால் எறும்பு புற்றுகளையும், கரையான் புற்றுகளையும் தோண்டி அவைகளை உணவாக உண்டிடும்.
உலகம் முழுவதும் இந்த பாலூட்டி வேட்டையாடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உலகிலேயே அதிகமாக வேட்டையாடி கடத்தப்படும் பாலூட்டிகளில் முதலிடத்தில் உள்ளது. கள்ளச்சந்தைகளில் இந்த விலங்கானது உணவுக்காகவும், மருந்துக்காகவும் விற்கப்படுகிறது. சீனாவில் இதை உணவாகவும், நாட்டு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். தற்போது கொரோனா எப்படி வந்திருக்கும் என தேடிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் உணவாக உட்கொள்ளப்படும் எல்லா விலங்குகளையும் சோதனை செய்து செய்து பார்த்ததில், இந்த எறும்புண்ணியில் இருந்த வைரஸின் ஜீனோமும் உலகத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஜீனோமும் ஒத்துப்போவதை கண்டறிந்துள்ளனர்.
வௌவால்கள், எறும்புண்ணிகள், உடும்பு, பல்லி போன்ற ஊர்வன பாலூட்டிகளில் மனிதன் கண்டுபிடிக்காத பல வைரஸ்கள் இருக்கலாம். ஆனால் அவைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் வைரஸ்கள் அந்த விலங்குகளை ஒன்றும் செய்யாது. ஆனால் அதே போல் பாலூட்டியாக இருக்கும் நம் உடலுக்குள் வைரஸ் எப்படியோ நுழையும் போது நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால் நமக்கு நோய் தொற்று வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக நிஃபா வைரஸ் வௌவால் கடித்த ஒரு பழத்திலிருந்த அதன் எச்சிலில் இருந்து மனிதனுக்கு வந்தது. இது போல பல வைரஸ்கள் இருக்கலாம், நாம் இன்னும் அதையெல்லாம் கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்த எறும்புண்ணி உண்பதை தடை செய்ய வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனென்றால் மறுபடி அதன் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.