’பண்டிகை’ படத்தின் மூலம் ’சென்னை 600028’ புகழ் நடிகை விஜயலட்சுமி தயாரிப்பாளராக அறிமுகமாகி தன் காதல் கணவர் ஃபெரோஸை இயக்குனராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் தன் கணவர் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்று சொல்லலாம். முதல் படத்தில் தன்னை ஒரு நம்பிக்கை அளிக்கும் படைப்பாளியாக முன்னிறுத்தியிருக்கிறார் ஃப்ரோஸ்.
வேலு (கிருஷ்ணா) ஒரு அனாதை. பள்ளிப் பருவத்தில் சண்டைக்கோழியாக இருந்தவன் இப்போது ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கைக்கு ஏங்குகிறான்.. வெளிநாடு சென்று வேலைபார்க்க பாஸ்போர்ட் எடுக்க பணம் தேவைப்படுகிறது அதோடு ஒரு சூப்பர் மார்கெட்டில் அறிமுகமாகும் காவ்யா (கயல் ஆனந்தி) என்ற பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். அவளிடம் பேச மொபைல் ஃபோன் வாங்கவும் பணம் தேவைப்படுகிறது. அதனால் மீண்டும் வன்முறைப் பாதைக்குத் திரும்புகிறான்..
மனிதர்களை மோதவிட்டு சண்டையில் யார் ஜெய்ப்பார் என்பதில் பந்தயம் கட்டி விளையாடும் நிழலுலக சாம்ராஜ்யத்தில் சண்டைபோடும் “பொம்மை” ஆக நுழைகிறான். சண்டைகளில் வெற்றிபெற்று பணம் பார்க்கிறான். ஆனால் ஒரு முக்கியமான போட்டியில் அவனை நம்பி பந்தயம் கட்டும் முனியன் (சரவணன்) என்பவனுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதோடு உயிருக்கும் ஆபத்து விளைகிறது.
முனியனைக் காப்பாற்ற வேறோரு பெரிய ஆபத்து நிறைந்த வேலையை செய்யத் துணிகிறான் வேலு. அதைச் செய்வதால் அவனுக்கு நடப்பது என்ன, அதிலிருந்து அவன் தப்பித்தானா என்பதே மீதிக் கதை.
முற்றிலும் புதியதொரு களத்தில் வித்தை காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஃபெரோஸ். முதல் பாதியில் கிரிக்கெட் பெட்டிங், கிரிக்கெட் நடக்காத நேரத்தில் மனிதர்களை சண்டையிட வைத்து அதன் மூலம் பெரும் லாபத்தில் கொழிக்கும் நிழலுலகம், அதை நடத்தும் தாதா (மதுசூதன் ராவ்), அவனது அடியாட்கள், சண்டைபோடும் வீரர்கள், சண்டை மீது பந்தயம் கட்டுபவர்கள், அந்தத் தொழில் எப்படி நடக்கிறது, அதில் உள்ளவர்களின் பின்னணி என்ன, அவர்கள் சட்டத்தின் பார்வையில் படாமல் எப்படி இயங்குகிறார்கள் என்பதை எல்லாம் விவரித்திருப்பதில் இயக்குனர் ஃபெரோஸின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. அதோடு இந்தக் காட்சிகள் நம்மைத் திரையுடன் கட்டிப்போடும் அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன. இடைவேளையில் ஒரு மிகச் சிறப்பான காட்சிக்குப் பின் இரண்டாம் பாதியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.
ஆனால் இரண்டாம் பாதியில் படம் அப்படியே தடம் மாறகிறது. இந்த சண்டை பந்தயம் தொடர்பான எந்தக் காட்சியும் இல்லை. இருந்தாலும் இரண்டாம் பாதியும் சுவாரஸ்யமாகவே நகர்கிறது. கொஞ்சம் சினிமாத்தனமாக லாஜிக் மீறல்களைப் பொறுத்துக்கொண்டால் இரண்டாம் பாதியையும் ரசித்துவிட்டு வெளியே வரலாம்.
ஆனால் ஒரு கதையாக முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தொடர்பில்லாமல் இருப்பதும் அதுவும் முதல் பாதியில் ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புக்கு தொடர்பில்லாமல் இரண்டாம் பாதியில் வேறோரு பாதையில் கதை பயணிப்பதும் ஏமாற்றமளிக்கிறது. திரைக்கதை ஆசிரியரின் வசதிப்படி திருப்பங்கள் நிகழ்கின்றன. புதிய புதிய பாத்திரங்கள் திணிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்அடுகிறது.
இருப்பினும் இந்தக் குறைகளை எல்லாம் மீறி, தொடக்கம் முதல் இறுதிவரை தொய்வடையாத திரைக்கதையுடன் பெருமளவில் சுவாரஸ்யமான திரைப்படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குனர் ஃபெரோஸை பூச்சண்டு கொடுத்து வரவேற்கலாம்.
’யாமிருக்க பயமே”, ‘கழுகு’ போல் இதுவும் தனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லிவந்தார் நடிகர் கிருஷ்ணா. அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவர் நடித்த படங்களில் மனதில் நிற்கும் படங்களில் இதுவும் ஒன்று. ஒரு நடிகராக அவர் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் சில படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகவும் மெனக்கெட்டு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கண்களாலும் உடல்மொழியாலும் உணர்ச்சிகளை கடத்துவதில் வெற்றிபெறுகிறார்.
நாயகி ஆனந்தி முந்தைய படங்களைவிட இன்னும் அழகாக இருக்கிறார். மென்மையான மனம்கொண்ட கொஞ்சிப் பேசும் கதாநாயகி பாத்திரத்துக்குத் தேவையானதைத் தருகிறார்.
கிருஷ்ணாவின் நண்பனாக வரும் பாண்டி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். கிருஷ்ணாவை பந்தயத்தில் ஈடுபடுத்தும் முனியனாக சரவணன் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். பலம் பொருந்திய நிழலுலக தாதாவாக மதுசூத ராவ் கச்சிதமான தேர்வு. ஆனால் அவர் நடிப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு வித்தியாசமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் நித்தின் சத்யா.
படத்தின் ஆகப் பெரிய பலம் ஆர்.ஹெச் விக்ரம் அமைத்திருக்கும் பின்னணி இசை. பாடல்களும் வித்தியாசமான ஒலிக் கலவைகளுடன் கவனம் ஈர்க்கின்றன. ஆர்வியின் ஒளிப்பதிவு படத்தின் வன்முறை அடித்தளத்துக்கு ஏற்ற நிறம் மற்றும் ஒளிக் கலவைகளுடன் காட்சி அனுபவத்தை சிறப்பாக்குகின்றது. பிராகரின் படத்தொகுப்பு சீரான கதையோட்டத்துக்கு தக்க துணை புரிகிறது. அன்பறிவ் இணையரின் சண்டைக் காட்சிகள் சபாஷ் போடவைக்கின்றன.
மொத்தத்தில் ‘பண்டிகை’ ஒரு புதிய க்ரூர உலகத்தை அறிமுகப்படுத்தும் சுவாரஸ்யமான ஆக்ஷன் படம்.
Comments