குழந்தைகளின் கண்ணை குருடாக்கும் செல்போன்…. ஆன்லைன் வகுப்புகளை சமாளிப்பது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த கல்வி முறையே மாறி இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அனைத்துப் பள்ளி வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சிறிய வயது குழந்தைகள் இந்த ஆன்லைன் கல்வி முறைகளினால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சோர்வு அடைந்து இருப்பதாக மருத்துவ உலகம் சுட்டிக் காட்டி இருக்கிறது.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வரும் குழந்தைகளின் கண்பார்வையில் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகரித்து இருப்பதாகவும் கூடவே காது செவிடாகும் தன்மை அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் எளிமையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள 350 பள்ளிகளில் 3-15 வயது மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 22% மாணவர்கள் படுக்கையில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை செல்போனில் கவனிப்பதாகத் தெரிவித்து உள்ளனர். இதனால் நாளடைவில் சோர்வை உணருவதாகவும் கூடவே உடல்நல பாதிப்பு வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும் 14% மாணவர்கள் தரையில் அமர்ந்து கொண்டே ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்கு ஒரு வரைமுறையான இடவசதி இல்லாமல் பல லட்சக்கணக்கான குழந்தைகள் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர ஒரு நாளில் 4-6 மணிநேரம் வரை வகுப்புகள் நடைபெறுவதையும் ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்த அளவு என்பது பள்ளிக்குச் செல்லும்போது இருக்கும் அளவை விட அதிகம் என்பதால் தற்போது சமூகநல ஆர்வலர்கள் பலரும் பதற்றம் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் அடுத்தடுத்து ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதால் குழந்தைகள் அதீத சோர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுவாக பள்ளிகளில் இருக்கும்போது குழந்தைகளுக்கு உடற்பயிற்சி, யோகா, டான்ஸ், விளையாட்டு, பொதுவெளியில் நடமாடுவது எனப் பல்வேறு ரிலாக்ஷேன்ஸ் இருக்கும். ஆனால் ஆன்லைன் வகுப்பில் வெறுமனே பாடங்கள் மட்டுமே நடத்தப் படுகின்றன. இதனால் பாடம் என்றாலே சில குழந்தைகள் வெறுப்பை வெளிப்படுத்தத் துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் 41% குழந்தைகளில் கண்களில் வலியை உணருவதாகத் தெரிவித்து உள்ளனர். அதேபோல 53% குழந்தைகள் சோர்வை உணருவதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும் ஒட்டுமொத்தமாக 52% குழந்தைகளுக்கு வாரத்தில் 5 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன என்றும் 36% குழந்தைகளுக்கு ஓரிரு நாட்கள் இடைவெளி விடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆன்லைன் வகுப்புகளின் நேரத்தையும் அளவையும் பெற்றோர்கள் சரியாக கவனித்து அதை ஆசிரியர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற குளறுபடிகளைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் வகுப்புகளுக்கு என்று தனியான வரையறையை வெளியிட்டு இருக்கிறது. அந்த வரையறையைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலும் படுக்கை, சோபா, டிவி ஹால் எனக் கண்ட இடத்திலும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும்போது அவர்கள் வகுப்புகளில் ஈடுபாடு காட்டுவது குறைந்து போகும். கூடவே அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு என்று தனி செட்அப் செய்ய வேண்டியது அவசியம். ஒரு இடத்தில் ஒரு டேபிள் மற்றும் நாற்காலியைப் போட்டுவிட்டால் அது வகுப்பறை போன்ற உணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். இதனால் உடல்நலம் மேம்படுவதோடு ஆன்லைன் வகுப்புகளின் தரமும் உயரும்.
மேலும் ஆன்லைன் வகுப்பு முடியும்வரை அதே இடத்தில் இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்வதற்கும் ஒரு எளிய வழியை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.
கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்றவாறு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
மொபைல் போன்களில் ஸ்கிரீன் பெரும்பாலும் சிறியதாகவே இருக்கும். இதுபோன்ற சிறிய ஸ்கிரீனை குழந்தைகள் நீண்டநேரம் பார்ப்பதால் அவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் செல்போனை நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் டிவி அல்லது லேப்டாப்பில் இணைத்து அதில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கச் சொல்லலாம். இதனால் ஸ்கிரீன் பெரியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹெக்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தும்போது ஏற்படும் காது வலியை நாம் பெரும்பாலும் உணர்ந்து இருப்போம். இப்படி இருக்கும்போது ஒரு நாளைக்கு 4-5 மணி நேரம் தொடர்ந்து ஹெக்ட்போனை அதுவும் டைட்டாக காதுகளில் மாட்டிக்கொண்டு இருக்கும் பிஞ்சு குழந்தைகளின் நிலைமை என்னாவகும் என்பது தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி டைட்டாக ஹெக்ட்போனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் காதுகளுக்கு வெளியே இருந்து எந்த காற்றும் செல்லாமல் அவர்கள் வலியை உணரலாம்.இதனால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் செல்போனில் சத்தம் அதிகமாக வைக்கும்போது அது காது நரம்புகளை பலவீனப்படுத்தி விடும் என்றும் கேட்கும் திறனை குறைத்து விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால்நாளடைவில் காது கேளாமை போன்ற குறைபாடு வரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற குறைபாடுகளைத் தவிர்க்க டைட்டாக இல்லாதபடி பெரிய ஹெக்ட்போன்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். அதோடு ஆன்லைன் வகுப்பு நேரங்களைத் தவிர அவர்களுக்கு ஹெக்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பதும் அவசியம். மேலும் செல்போன்களில் உள்ள ஒலி அளவு 60% மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ஆன்லைன் வகுப்புகளைத் தாண்டி குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை நாம் அவர்களை கண்காணிக்காமல் விடும்போது செல்போனிற்கு அடிமையாகும் அபாயமும் இருக்கிறது.
ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் சோர்வை தவிர்க்க ஒவ்வொரு வகுப்பிற்கு இடையிலும் பெற்றோர்கள் அவர்களுடன் விளையாடலாம் அல்லது தான் செய்யும் ஏதாவது ஒரு செயலில் அவர்களில் ஈடுபடுத்தலாம். இதுபோன்ற விஷயங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து புத்துணர்ச்சியோடு இருப்பதற்கு உதவும். மேலும் வகுப்புகளை தாண்டி பெற்றோர்கள் குழந்தைகளுடன் தனிப்பட்ட உறவுநிலையை பேணுவது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கு கண்களில் வலி, வீக்கம், சிவந்து போதல், காதுவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது இதுகுறித்து அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும் அவசியம். கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க முடியாது. ஆனால் இதுபோன்ற வகுப்புகளினால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க நாம் அவசியம் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com