சமாதான பேச்சுவார்த்தை குறித்து பாண்டவர் அணி எடுத்த முக்கிய முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்புமனு தாக்கலும் முடிந்துவிட்டது. வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாக இருக்கும் நிலையில், நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை பாதுகாக்கவும், தேர்தலை தவிர்க்கவும் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம், பெப்சி அமைப்பு ஆகியவை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 11ஆம் தேதி சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் இரு தரப்பினர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுக்கும் நிலையில், பாண்டவர் அணி தங்கள் சார்பில் ஒரு விளக்கத்தை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
பாண்டவர் அணி தங்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வருகிற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து , மனுவை திருப்பி பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது. தேர்தல் வர இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் , தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது பார்த்து நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆனால் இந்த தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்த பயத்திற்கு சில விளக்கம் அளிப்பது எங்களது கடமையாக நினைக்கிறோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று குறைந்த பட்சம் 27 சங்கங்கள் இருக்கிறது. அனைத்து சங்கத்திற்கும் 3 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்றுவரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் பாண்டவர் அணியின் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்துகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கூட கடந்த முறை தேர்தல் நடந்த போது நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி , அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்! ஒற்றுமையாகவும் இருக்குறீர்கள் ! இப்படி , உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயக தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது ?
நடிகர் சங்க தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான அந்த மனுவவை தேர்தல் அதிகாரி அனுப்பப்படவுள்ள இந்த நிலையில் , பாண்டவர் அணியால் மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்ற உங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது .
இந்த கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால், நல்லதை செய்ய துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்போம்.இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசி வரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்ப்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம். இந்த கூட்டறிக்கையை வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி.
இப்படிக்கு
பாண்டவர் அணி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com