ட்ரோன் மூலம் போதை வஸ்து விற்பனை செய்த இருவர் கைது!
- IndiaGlitz, [Monday,April 13 2020]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த 20 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மதுக்கடைகள் மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்யும் கடைகள் கடந்த மூன்று வாரங்களாக மூடப்பட்டதால் மதுவிற்கும் போதைக்கும் அடிமையான பலர் தற்போது செய்வதறியாமல் திண்டாட்டத்தில் உள்ளனர்
இந்த நிலையில் போதை வியாபாரிகள் டெக்னாலஜி மூலம் பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மோர்பி என்ற பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து ட்ரோன் மூலம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பான்மசாலா உள்பட போதை வஸ்துக்கள் சப்ளை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
வீட்டில் மாடியில் நின்று கொண்டிருந்த நபர்கள் டிரோனில் இருந்து பான்மசாலா பெற்றுக்கொண்டு அதிலேயே பணத்தையும் வைத்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரல் ஆனதை அடுத்து போதை வஸ்து விற்பனை செய்தவர் மற்றும் ட்ரோன் ஆப்பரேட்டர் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பது உள்பட பல்வேறு உதவிகளை காவல்துறையினர் செய்து வரும் நிலையில் போதை வியாபாரிகள் இதனை தங்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது