'தளபதி 67' படத்தின் முக்கிய கேரக்டரில்.... வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,August 30 2022]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது இந்த படத்தில் கம்பீரமான நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'Palthu Janwar’ என்ற திரைப்படத்தில் நாய் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது. இந்த நாயின் கம்பீரம் படம் பார்ப்பவர்களை அதிரச் செய்த நிலையில் இதே நாய் ’தளபதி 67’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த இந்த நாயின் உரிமையாளர் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய்யின் படத்தில் இந்த நாய் நடிக்க இருப்பதாகவும் டிசம்பர் மாதம் படப்பிடிப்புக்கு அழைத்து வர படக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து ’தளபதி 67’ படத்தில் இந்த நாயை வேற லெவலில் பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் ஆக்சன் கிங் அர்ஜூன் உள்பட 6 முக்கிய வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.