வீடு முழுவதும் தகரத்தை வைத்துமூடி அத்துமீறல்… கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டதால் புறக்கணிப்பு!!!
- IndiaGlitz, [Wednesday,August 26 2020]
சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த ஒருவரின் வீட்டுக் கதவு, ஜன்னல் போன்ற பகுதிகள் முழுவதும் தகரத்தை வைத்து அடைத்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குரோம்பேட்டை அடுத்த புருஷோத்தமன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியன் வங்கியில் வேலைப்பார்க்கும் ஊழியர் ஹேம்குமார் என்பவருக்கு கடந்த 14 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சிகிச்சை முடிந்து ஹேம்குமார் வீடு திரும்பியதும் அவரது வீட்டின் கதவு ஜன்னல் என அனைத்துப் பகுதிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் தகரத்தை கொண்டு திறக்க முடியாத அளவிற்கு அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டிற்குள் ஹேம்குமார் மனைவி, குழந்தைகள் என 6 பேர் தவித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கிளம்பியது. இது மனித உரிமை மீறல் எனவும் சிலர் கருத்துக்கூறத் தொடங்கினர்.
இதையடுத்து பல்லாவரம் மாநகராட்சி ஊழியர்கள் ஹேம்குமார் வீட்டில் பொருத்தப்பட்ட தகரத்தை அகற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநகராட்சி ஊழியர்கள் திறக்க முடியாத அளவிற்கு கதவுகளை மூடவில்லை. மற்றவர்களின் பாதுகாப்பு கருதியே இப்படி செய்தோம் எனவும் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ஹேம்குமாரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். அத்யாவசியப் பொருட்களை வாங்ககூட வழியில்லாமல் தவித்து வந்தோம் எனத் தெரிவித்து இருக்கிறார். இச்சம்பவத்தால் கதவு, ஜன்னல்களை அடைத்த மாநகராட்சி ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன.