அரசியலில் நாகரிகம் மிகவும் முக்கியம்… முகம் சுளிக்க வைக்கும் எதிர்க்கட்சி மீதான விமர்சனங்கள்!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்குச் சேகரிப்பின்போது முகம் சுளிக்க வைக்கும் படி நடந்து கொள்வதாகச் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை அடுத்து அவர்களை யார் கேள்வி கேட்பது என்பது போன்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் இவரது நடவடிக்கைகளால் கட்சிக்குள் சர்ச்சைகள் வெடித்து வருவதாகவும் கூறப்பட்டது. அடுத்து தமிழக முதல்வராக இருந்து வரும் ஒருவரையே இவர் விமர்சித்தும் பேசத் தொடங்கி விட்டார். பெண்கள் குழுமி இருக்கும் கூட்டங்களிலும் இவர் தரக் குறைவான வார்த்தைகளை பேசுவதாகக் கூறப்பட்டது.

முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “நெஞ்சம் முழுக்க அழுக்கும் துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி. கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி” என உதயநிதியின் பேச்சு குறித்து விமர்சித்து இருந்தார்.

சமீபத்தில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திபோது பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அரசியல் குடும்பத்தில் இருந்து ஸ்டாலின் வந்திருந்தாலும் அவருக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதனால் வாக்கு சேகரிப்பின்போது நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துமாறும் பெண்களுக்கு மதிப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் ஆலோசனைகளை கூறிவருகின்றனர்.