கணவரை கொலை செய்த கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட மனைவி: அதன்பின் நடந்த விபரீதம்!

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

கணவரை கொலை செய்த கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் செய்த விபரீத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஆப்கன் நாட்டு அகதி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளம் பெண்ணின் கணவருக்கு குலிஸ்தான் என்ற நண்பர் இருந்தார். அவரிடம் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொடுத்து வைத்திருந்த நிலையில் ஒருநாள் உடல் நலம் சரியில்லை என்பதற்காக மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் குலிஸ்தான் தன்னிடம் பணம் இல்லை என்றும் ஆனால் மருந்து வாங்கி தருகிறேன் என்று கூறி அவரை அழைத்துச் சென்று சில ஊசி மருந்துகளையும் மாத்திரைகளையும் வாங்கி, ஒரு ஊசியை அவரே செலுத்தி விட்டார். இன்னொரு ஊசியை வீட்டில் போய் செலுத்தி கொள் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் குலிஸ்தான் செலுத்திய ஊசியால் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து குலிஸ்தான் தான் தனது கணவரை கொலை செய்தார் என்று இளம்பெண்ணுக்கு தெரிந்து விட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து கொலைகாரன் குலிஸ்தானை தானே பழிவாங்க முடிவு செய்தார்.

குலிஸ்தானிடம் சில நாட்கள் நெருங்கி பழகி பின்னர் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். குலிஸ்தானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும் அந்த இளம்பெண் கூறி ஆசை வார்த்தைகளை நம்பி அவரை திருமணம் செய்து கொண்டார். குலிஸ்தானை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கணவரை கொன்ற அவரை பழி வாங்குவதற்காக காலநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சில மாதங்கள் கழித்து தனிக்குடித்தனம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து ஒரு நாள் குலிஸ்தான் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குலிஸ்தானை கொன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தபோது தனது கணவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குலிஸ்தான் கொலை செய்ததாகவும், அதனால் அவரை பழி வாங்கவே அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்றும் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.