தன்னுடைய சாவுக்கு தானே சான்றிதழ் தயாரித்த பெண்மணி!!! இத்தனை கோடி ரூபாய் மோசடியா???
- IndiaGlitz, [Monday,December 07 2020]
பாகிஸ்தான் நாட்டில் ஒரு பெண்மணி தன்னுடைய சாவுக்கு தானே போலிச் சான்றிதழ் தயாரித்து அதன் மூலம் 23 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதோடு முடிந்தாலும் பரவாயில்லை. செத்து விட்டதாகப் பொய்க்கூறிய அந்தப் பெண்மணி இதுவரை பாகிஸ்தானில் இருந்து 5 முறை வெளிநாடுகளுக்கு விமானத்தின் மூலம் பயணம் செய்து இருக்கிறார். மேலும் 10 நாடுகளுக்கு அவர் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.
கராச்சி மாகாணத்தில் வசித்து வரும் கர்பே எனும் பெண்மணி கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு மருத்துவர் மற்றும் 2 அரசாங்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து தான் இறந்து விட்டதாகப் போலி சான்றிதழ் தயார் செய்து இருக்கிறார். அந்தச் சான்றிதழை வைத்து ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 1.5 மில்லியன் டாலர் பணத்தை இழப்பீடாகப் பெற்று இருக்கிறார். அது இந்திய மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் 23 கோடி ரூபாய் பணமானது கர்பேயின் 2 குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் அதோடு விட்டுவிடாமல் 5 முறை பாகிஸ்தான் ஏர்லைன்ஸை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு பயணம் செய்து இருக்கிறார். அவர் இதுவரை 10 நாடுகளுக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய கர்பேவை அதிகாரிகள் சோதனை இட்டு இருக்கின்றனர். அப்போதுதான் முதல் முறையாக சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனால் அடுத்தடுத்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் கர்பே செத்ததாக நாடகமாடி 23 கோடி ரூபாய் மோசடி செய்ததைக் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.