இந்தக் காலத்திலுமா… பெண்ணாக இருப்பதால் ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்ட சம்பவம்!!!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற பெண்மணி ஒருவருக்கு அவரது பாலினத்தைச் சுட்டிக்காட்டி ஓட்டுநர் உரிமம் வழங்க மறுத்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களை சமமாகக் கருதுவதில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல, அனைத்து வளர்ந்த நாடுகளும் ஏதோ ஒரு விதத்தில் இப்போதும் தயக்கம் காட்டியே வருகின்றன. ஆனால் தற்போது வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற வெளிப்படையாக செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம்.

இதேபோன்று ஈரானில் இந்த ஆண்டுதான் பெண்கள் காரை ஓட்டுவதற்கும் ஏன் பெண்கள் துணையில்லாமல் தனியாக வெளியே செல்வதற்கும், கால்பந்து விளையாடுவதற்கும் அனுமதிக்கப்பட்டனர். இப்படியிருக்கும் பாகிஸ்தானில் நிலைமை இன்னும் மோசமாக இருப்பது தற்போது ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பாகிஸ்தானில் பெரும்பாலும் பெண்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமத்தை பெற கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. கராச்சியில் பகுதியில் உள்ள ஓட்டுநர் உரிமம் பெறும் அலுவலகத்திற்கு பெரோஷ்பூர்வல்லா என்ற இளம்பெண் சென்றிருக்கிறார். அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கான உரிமத்தைக் கேட்டு அந்த அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்கிறார்.

அந்த விண்ணப்பித்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் பெண்களுக்கு எல்லாம் ஓட்டுநர் உரிமம் இங்கு வழங்குவதில்லை எனக் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்ட அந்தப் பெண்மணி அதிர்ந்து போயிருக்கிறார். இதனால் ஏமாற்றமடைந்த அப்பெண்மணி இதுகுறித்து மற்ற அலுவலகத்திலும் விசாரித்து இருக்கிறார். அப்போதுதான் தெரிந்து இருக்கிறது. எல்லா அலவலகங்களிலும் இதே நிலைமைதான் என்று. மேலும் அதிகாரிகளுக்கு நெருக்குதலைக் கொடுத்தால்தான் அவர்களிடம் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் தனது வருத்தத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அந்தத் தகவலை அந்நாட்டு அதிபர் இம்ரான் கானுக்கு டேக் செய்திருக்கிறார். இதனால் சில தினங்களுக்கு பின்னர் கராச்சி பகுதியின் ஓட்டுநர் உரிம அலுவலர்கள் அவரைத் தொடர்பு கொண்டு ஓட்டுநர் உரிமத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் பெண் என்பதால் ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் தற்போது கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.