பிரதமர் பதவிக்கு ஆபத்தா? புது நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட 4 உயர் இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் தவித்துவரும் நிலையில் இதே பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சியினர் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடன் சுமை மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பணம் திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். ஆனால் இந்தத் திட்டம் எதுவும் கைக்கொடுக்காத நிலையில் உலக நிதியத்திடம் இருந்து அவர் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மற்ற உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ முன்வராத நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தற்போது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இதனால் 342 எம்.பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் வெற்றிப்பெற வேண்டுமானால் 172 வாக்குகள் தேவை. இதில் தன்னுடைய தெஹ்ரிக் கட்சியினரின் 155 வாக்குகள் இம்ரான் கானுக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது.
மேலும் கூட்டணி கட்சிகளின் 23 வாக்குகளையும் சேர்த்தால் இம்ரான்கான் நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வார் என்று முன்னதாகக் கருதப்பட்டது.
ஆனால் சொந்தக் கட்சியில் இருக்கும் 24 எம்.எக்கள் இம்ரான்கான் மீது அதிருப்தியை வெளியிட்டு வருவதாகத் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களித்தால் பாகிஸ்தானில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் அந்த நாடு கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து அதிருப்தி எம்பிக்கள் அனைவரையும் சமாளிக்கும் நடவடிக்கையில் பிரதமர் இம்ரான்கான் ஈடுபட்டுள்ளார். அதேபோல இராணுவத் தளபதி உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தவும் இம்ரான் கான் முயற்சித்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் இராணுவம் இம்ரான் கான் மீது கடும் அதிருப்தியைக் காட்டிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout