கோழிக்கோடு விமான விபத்து: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்கள்!

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

நேற்றிரவு துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானதில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இந்த விபத்து குறித்த தகவல்கள் ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும் இன்னொரு பக்கம் இந்த விபத்தால் வெளிப்பட்டுள்ள மனிதநேயம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை அடுத்து நள்ளிரவு என்றும் பாராமல் நள்ளிரவு 12 மணிக்கும், 1 மணிக்கும் ரத்த தானம் கொடுக்க கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்ததான முகாமில் வரிசையில் நின்றனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி மனித நேயம் இன்னும் நீர்த்துபோகவில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளது

இதே போல் இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் அவர் குடும்பத்துடன் செல்பி எடுத்துள்ளார். இந்த நிலையில் விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் அந்த நபர் உயிரிழந்து விட்டதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தை விபத்தில் இருந்து தப்பியதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. செல்பி எடுத்து ‘நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்’ என்று குடும்பத்தினர்களுக்கு தகவல் அளிக்க ஃபேஸ்புக்கில் பதிவு செய்த சில மணி நேரங்களில் அந்த பயணி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த அந்த பயணியின் மனைவி மற்றும் குழந்தை உயிர் பிழைத்துவிட்டதாகவும், ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்ற தகவல் தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருவதாகவும் செய்தி வெளிவந்துள்ளது

அதேபோல் இந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தை ஒன்று உயிர்பிழைத்துள்ளது. ஆனால் அவருடன் பயணம் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. அந்த குழந்தையை மீட்ட மீட்புப்படை வீரர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து, இந்த குழந்தை யார் என்பதை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.