பத்மாவத்: இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்
பாலிவுட் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கிய 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படம் இந்திய சரித்திர படங்களுக்கு ஒரு முன்னோடி என்ற நிலையில் அதே இயக்குனர் இயக்கிய இன்னொரு படம் தான் 'பத்மாவத்'. பல்வேறு தடைகளை தாண்டி சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் வெளியாகும் இந்த படம், எதிர்ப்புகளுக்கு உகந்த படமா? அல்லது இந்திய திரைப்பட வரலாற்றில் இந்த படம் இன்னொரு மைல்கல்லா? என்பதை பார்ப்போம்
மாற்றான் மனைவிக்கு ஆசைப்படும் இராவணன், எமனிடம் போராடி கணவனை மீட்ட சத்தியவான் சாவித்திரி ஆகிய இரண்டு கதைகளையும் இணைத்து கூறுவது தான் இந்த 'பத்மாவத்' படத்தின் சுருக்கமான கதை
டெல்லி சுல்தான் மன்னனுக்கு உதவி செய்து அவரது மகளையே பரிசாக பெறும் அலாவுதீன் கில்ஜிக்கு (ரன்வீர் சிங் ) சுல்தான் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இதற்காக காத்திருந்து தக்க சமயத்தில் சுல்தானை கொன்று அரியணை ஏறுகிறார்.
இந்த நிலையில் ராஜபுத்திர அரசனான ரத்தன் சிங் (ஷாஹித் கபூர்), வேட்டைக்கு செல்லும் இடத்தில் 'பத்மாவதியை (தீபிகா) கண்டு காதல் கொள்கிறார். பின்னர் தன்னுடைய நாட்டிற்கு அழைத்து சென்று திருமணமும் செய்து அரசியாக்குகிறார். ராஜபுத்திர அரசின் ராஜகுரு அரசருக்கே துரோகம் செய்ய, அவரை சிறைக்கு அனுப்ப உத்தரவிடுகிறார் ரத்தன்சிங். ஆனால் பத்மாவதியின் யோசனைப்படி அவரை நாடு கடத்துகிறார் அரசர்
நாட்டை விட்டு வெளியேறும் ராஜகுரு நேராக அலாவுதீனிடம் சென்று, பத்மாவதி கொள்ளை அழகு என்றும் அவரை அடைந்தால் நீ உலகம் முழுவதும் ஆளலாம் என்றும் ஆசைத்தீயை மூட்டுகிறார். இதனால் பத்மாவதியை அடைய முடிவு செய்யும் அலாவுதின் ராஜபுத்திர அரசு மீது போர் தொடுக்கின்றார் அலாவுதீன். ஆனால் போரினால் ராஜபுத்திர அரசை வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டு நயவஞ்சமாக ரத்தன்சிங்கை கடத்தி, பத்மாவதி நேரில் வந்தால் அரசரை விடுதலை செய்வதாக செய்தி அனுப்புகிறார். கணவனை மீட்க களமிறங்கும் பத்மாவதியின் அதிரடி என்ன? கணவரை மீட்டாரா? அலாவுதீன் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை
இந்த படத்தில் மூன்றே மூன்று கேரக்டர்கள் முழுக்க முழுக்க தூக்கி நிறுத்துகின்றனர். ஷாஹித் கபூர், ரன்வீர் சிங், மற்றும் தீபிகா படுகோனே. மூவரும் நடிப்பை போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை. குறிப்பாக அலாவுதின் கில்ஜியாகவே ரன்வீர்சிங் வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். கண்களில் காமப்பார்வை, குரூரம், வெறி, நயவஞ்சகம் என ஒரு நடிகர் இத்தனை உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வர முடியுமா? என்ற அளவில் திகைக்க வைக்கின்றார்.
அரசர் ரத்தன்சிங், ராணி தீபிகா ஆகிய இருவருக்குமே அமைதியான, அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகளுடன் கூடிய நடிப்பை அளித்துள்ளனர்.. ஒரு அரசருக்கே உள்ள கம்பீரம், எதிரி என்று தெரிந்தும் நட்பு பாராட்டுவது, வஞ்சக வலையில் வீழ்வது என ஷாஹித் கபூரின் நடிப்பு அருமை. முதல் பாதியில் அரசருடன் காதல், திருமணம், அரசரின் முடிவெடுக்க உதவுதல், நடனம் என இருக்கும் தீபிகாவின் நடிப்பு இரண்டாவது பாதியில் கணவனை மீட்க களமிறங்கியவுடன் சீறுகிறது. இந்த படத்தில் தீபிகா, ஷாஹித் கபூர் இருவருக்குமே வசனங்கள் மிகக்குறைவு. ஆனால் இருவரின் கண்கள் பக்கம் பக்கமாய் வசனங்கள் பேசுகிறது. குறிப்பாக 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சியில் தீபிகாவின் நடிப்பு நெஞ்சை உருக வைக்கும் காட்சிகள்
சித்தோர் ராணி பத்மினியை தெய்வமாக வழிபடும் ராஜபுத்திர வம்சத்தினர் இந்த படத்தில் அவரை பற்றி தவறாக சித்தரிப்பதாக கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்ட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்த படத்தை பார்த்தால் உண்மையில் தங்களுடைய போராட்டம் எந்த அளவுக்கு தவறானது என்பதை உணர்வார்கள்.
ஒரு சரித்திர படத்தில் இடம்பெற்றிருக்கும் காதல், துரோகம், ஒரு அரசரின் மனைவியை இன்னொரு அரசர் கைப்பற்ற முயல்வது, போர் தந்திரங்கள், போரில் ஏற்படும் திடீர் திருப்பங்கள், பெண்களின் வீரம், மானத்திற்காக உயிரையே விடும் துணிச்சல் மிக்க ராஜவம்ச பெண்கள் ஆகிய அத்தனை அம்சங்களையும் மிகச்சரியான அளவில் கொடுத்துள்ள இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலிக்கு பாராட்டுக்கள். காட்சி அமைப்புகளின் பிரமாண்டம் பிரமிக்க வைக்கின்றது. இருப்பினும் பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களில் பார்த்த போர் காட்சிகளை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்
இந்த படத்தின் இன்னொரு ஹீரோவாக காஸ்ட்யூம் டிசைனரை கூறலாம். தீபிகாவுக்கும் ஆதித்தி ராவ் ஹைதிக்கும் காஸ்ட்யூம் மிக அருமை. மேலும் இந்த படம் ஒரு இந்தி டப்பிங் என்ற உணர்வே இல்லாத வகையில் தமிழில் கச்சிதமாக டப்பிங் செய்ததும் மிக அருமை. இருப்பினும் பாடல் காட்சிகளில் மட்டும் இந்தி வாடை அடிக்கின்றது. மேலும் கூர்மையான வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்
சந்தீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கின்றது. பல காட்சிகள் இருட்டில் இருப்பதால் அதற்கேற்ற லைட்டிங்கில் செய்யப்பட்டுள்ள ஒளிப்பதிவு அருமை. மேலும் படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுவதால் எடிட்டர் கொஞ்சம் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்த படம் 3D டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் ராஜபுத்திர பெண்கள், அலாவுதீன் மீது நெருப்புத்துண்டுகளை வீசும்போது தியேட்டருக்கு உள்ளேயே அந்த நெருப்புத்துண்டுகள் விழுவது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது.
இந்த படத்தில் குறை என்று சொல்வதாக இருந்தால் முதல் பாதியின் திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகர்வதை மட்டும் கூறலாம். மற்றபடி தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் ஆகியோர்களின் நடிப்புக்காகவும், பிரமாண்டத்திற்காகவும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம் தான் பத்மாவத்
மொத்தத்தில் பாகுபலிக்கு பின் இந்திய சினிமாவை தலைநிமிற செய்யும் படம் தான் பத்மாவத்
Comments