Padai Veeran Review
படைவீரன்: பலத்துடன் நிமிர்ந்து நிற்கும் வீரன்
தனுஷின் 'மாரி' படத்தில் வில்லனாக அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விஜய் யேசுதாஸ், முதல்முறையாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ரஜினி முதல் சத்யராஜ் வரை பல வில்லன்கள் ஹீரோவாக மாறியிருந்தாலும் முதல் படத்தில் வில்லன், இரண்டாவது படத்திலேயே ஹீரோ என பதவியுயர்வு பெற்றுள்ள விஜய் யேசுதாசுக்கு இந்த படம் திருப்பத்தை கொடுக்குமா? என்பதை பார்ப்போம்
தேனி மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம் தான் ஹீரோ விஜய் யேசுதாஸ் ஊர். வழக்கமான கிராமத்து இளவட்டங்கள் போல் வேலைவெட்டிக்கு செல்லாமல் ஊரில் உள்ளவர்களை வம்புக்கிழுத்து அடிதடியில் இறங்குவது, சின்ன சின்ன திருட்டுக்கள் செய்வது, ஹீரோயின் அம்ரிதா உள்பட பெண்களை கேலி செய்வது இவைதான் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் செய்யும் வேலை. இந்த நிலையில் விஜய் யேசுதாசின் மாமா, பாரதிராஜா, அவருக்கு போலீஸ் வேலையை தனது செல்வாக்கால் வாங்கி கொடுக்கின்றார். இந்த நிலையில் அம்ரிதாவுடன் காதல் ஏற்பட போலீஸ் டிரெனிங் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு போலீஸ் டிரெனிங் செல்கிறார் விஜய் யேசுதாஸ். டிரெனிங் முடிந்தவுடன் தன்னுடைய கிராமத்தில் நடந்து வரும் ஜாதிச்சண்டையை கட்டுப்படுத்த பந்தோபஸ்துக்கு செல்லும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. தன்னுடைய நெருங்கிய சொந்தபந்தங்கள், உடன் விளையாடி நண்பர்கள், ஆகியோர்களே கலவரத்தில் ஈடுபடுவதும், கலவரத்தை தூண்டிவிடுவதையும் காணும் விஜய் யேசுதாசுக்கு ஒருபக்கம் போலீஸ் கடமை, இன்னொரு பக்கம் சொந்தபந்தங்கள் என்ற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அவர் எடுக்கும் அதிரடி முடிவு என்ன? ஜாதிக்கலவரத்தை தூண்டிவிடும் ஜாதித்தலைவரை அவர் என்ன செய்தார்? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்
முதல் படத்திற்கும் இந்த படத்திற்கு விஜய் யேசுதாசின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. முதல் பாதியில் லுங்கி, பட்டன் போடாத சட்டை என கிராமத்து ரெளடியாக கலக்கும் காட்சிகளிலும், திருவிழா நேரத்தில் குத்துப்பாட்டுக்கு நண்பர்களுடன் ஆட்டம் போடும் விஜய்யேசுதாஸ் நடிப்பு ஓகே. இரண்டாவது பாதியில் மிடுக்கான போலீஸ், சொந்த பெரியப்பாவே கலவரத்தை தூண்டிவிடுவதை அறிந்து அதிர்வது, ஜாதியின் மானத்தை காப்பாற்ற உறவினர் பெண்ணை கொலை செய்யும் கொடுமையை கேள்விப்பட்டு கலங்குவது என நடிப்பில் கலக்குகிறார். முதல் பாதியில் அம்ரிதாவை வம்புக்கிழுத்து அவரை பார்க்க வரும் மாப்பிள்ளைகளை கேலி செய்வது, பின்னர் அம்ரிதா மீதே காதல் வயப்படுவது என உணர்ச்சிபூர்வமான நடிப்புக்கு பாராட்டுக்கள்
நாயகி அம்ரிதா துடுக்கான கிராமத்து பெண் கேரக்டரில் நடித்திருந்தாலும் காட்சிகள் குறைவு என்பதால் அவரை முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை குறித்து அவர் பேசும் வசனங்கள் நல்ல காமெடி. நல்ல கேரக்டர் கொடுத்தால் நிச்சயம் பெரிய நாயகியாகும் வாய்ப்பு உள்ளது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஒரு எக்ஸ்சர்வீஸ்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். ஜாதியால் பிரிந்து கிடக்கும் மனித சமுதாயம் குறித்து அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி. வேற்று ஜாதிக்காரனை காதலிப்பதாக சந்தேகப்பட்டு அவரது தம்பி மகளை தனது உறவினர்களே கொலை செய்ததை கண்டு கலங்கும் காட்சியில் அவரது நடிப்பு உச்சக்கட்டம். ஜாதியை ஒழிக்க அவர் விஜய் யேசுதாசுக்கு கூறும் யோசனை தான் படத்தின் திருப்புமுனை காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் யேசுதாஸ் தந்தை கேரக்டரில் நடித்துள்ள இயக்குனர் மனோஜ்குமார், அக்காவாக நடித்துள்ளவர், ஜாதிக்கட்சி தலைவராக நடித்துள்ள கவிதாபாரதி, மற்றும் அனைத்து நடிகர்களும் அவரவர் பணியை சரியாக செய்துள்ளனர்.
மணிரத்னம் அவர்களின் உதவியாளரான இயக்குனர் தனா, பல படங்களில் பார்த்த இரண்டு ஜாதியினர் மோதல் என்ற கதையை தேர்வு செய்திருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் காட்டி தப்பிவிடுகிறார். ஜாதிக்கட்சி தலைவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக ஜாதிவெறியை மக்கள் மத்தியில் எப்படி திணிக்கின்றார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதம், இன்றைய நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் முதல் பாதியில் அதிக பாடல்கள், நீளமான திருவிழா காட்சிகள், ஆகியவற்றை குறைத்திருக்கலாம். பெற்ற மகளை ஊரில் உள்ள பெண்கள் சேர்ந்து கருணைக்கொலை செய்யும்போது அதை தந்தை வேடிக்கை பார்ப்பது என்பதெல்லாம் இந்த காலத்திலும் நடக்கின்றதா? என்று தெரியவில்லை. அதேபோல் இந்த படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தாலும் இந்த முடிவை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறிதான்.
கார்த்திக் ராஜா இசையில் தனுஷ் பாடிய 'லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா' பாடல் ஆட்டம் போட வைக்கின்றது. மாட்டிக்கிடேன்' பாடலும் ஹரிஹரன் குரலில் இனிமையாக உள்ளது. அதேபோல் பின்னணி இசையும் அருமை. குறிப்பாக கலவர காட்சியில் கார்த்திக் ராஜா, இசைஞானியின் வாரிசு என்பதை நிரூபித்துவிட்டார்.
ராஜவேல் மோகனின் கேமிரா கிராமத்தை அழகை அழகாக படம்பிடித்துள்ளது. கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் திருவிழா காட்சிகளை வண்ணமயமாக்க செய்த உழைப்பு திரையில் தெரிகிறது. எடிட்டர் புவன்ஸ்ரீனிவாசன் முதல் பாதியில் மட்டும் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்
ஜாதி மோதல், கெளரவக்கொலை, காதல், கடமை என அத்தனையும் ஒருங்கே அமைந்த இந்த கிராமத்து கதையை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.
- Read in English