பிரச்சனை வந்தவுடன் ஓடுவதா? 'காட்மேன்' குறித்து பா.ரஞ்சித் கருத்து

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் உருவான ’காட்மேன்’ வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தொடருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஒருசில அமைப்புகள் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து காட்மேன்’ தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை இருவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளனர். ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘காட்மென்’ தொடரை ஒளிபரப்பவிருந்த ஜீ5 நிறுவனம் இந்த தொடரை ஒளிபரப்ப போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இயக்குனர் பா.ரஞ்சித் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

காட்மேன், ஜீ5 தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள்!!

இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய ஜீ5 நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல!!! மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க!! என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.