'கபாலி' படத்தால் மன உளைச்சல் அடைந்தேன்: பா ரஞ்சித்
- IndiaGlitz, [Tuesday,August 23 2022]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ படத்தை இயக்கிய பிறகு மன உளைச்சலில் இருந்தேன் என்றும் அந்த மன உளைச்சலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான் தீர்த்து வைத்தார் என்றும் பா ரஞ்சித் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பேசிய பா ரஞ்சித், ‘ஜெய்பீம் என்ற ஒரு வார்த்தைதான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து உள்ளது என்றும், அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
’சென்னை-28’ படம் தான் என் வாழ்வை செதுக்கியது என்றும் நான் நினைத்தபடி ஒரு திரைப்படத்தை எடுக்க முடிய முடியுமென கற்றுக்கொடுத்தது வெங்கட் பிரபு அவர்கள் தான் என்றும் கூறினார். மேலும் சசியிடம் உதவியாளராக இருந்தபோது அவர் என்னை உட்காரவைத்து மரியாதையாக பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அதையே நான் இன்று என் உதவியாளர்களிடம் கடைபிடிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
என் வாழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் ஞானவேல்ராஜா ஆகிய இருவரும் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பாக ’கபாலி’ படம் இயக்கிய போது அவர் எனக்கு கொடுத்த சுதந்திரம் மிகப் பெரியது என்றும் கூறினார். ’கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் எனக்காக ஒப்புக் கொண்டார் என்றும் படம் வெளியான பிறகு ஹிட் என்று சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்த போது கலைப்புலி தாணு அவர்கள் என்னை கூப்பிட்டு படத்தின் கலெக்ஷன் காட்டி என்னை ஊக்கப்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ’அட்டக்கத்தி’ படத்தை ஞானவேல்ராஜா அவர்கள் ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இங்கே இருந்திருக்க முடியாது என்றும் பா ரஞ்சித் கூறினார்.