வெற்றி வித்தியாசத்தைவிட நோட்டாவுக்கு அதிக வாக்கு… பரபரப்பை கிளப்பும் பீகார் தேர்தல்!!!

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

 

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டமாக நடந்து முடிந்தது. 7.3 கோடி வாக்குகள் கொண்ட இந்தத் தேர்தலில் 7 லட்சத்துக்கு அதிகமனோர் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்றால் தேர்ந்தெடுக்கும் நோட்டாவுக்கு வாக்கு அளித்து உள்ளனர். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சமீபத்தில் பீகார் மாநிலத்தின் தேர்தல் புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருந்தது. அதில் 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 பேர் நோட்டாவுக்கு வாக்கு அளித்து உள்ளனர். இந்த எண்ணிக்கை பல தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டிய வாக்கு வித்தியாசத்தை விடவும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாக்கு எண்ணிக்கை அம்மாநிலத்தில் பதிவான ஓட்டுகளை வைத்து பார்க்கும்போது 1.7% என்பதும் குறிப்பிடத்தக்கது.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் தற்போது தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 75 தொகுதிகளை வென்று பெரும் கட்சியாக அம்மாநிலத்தில் உருவெடுத்து உள்ளது. ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இத்தேர்தலில் வெறுமனே 35 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றிருக்கிறது. இதனால் பீகார் மாநிலத்தில் காங்கிரஸின் மெகா கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இத்தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் அல்ல, நாங்கள் கூட்டணிக்கு ஆதரவாக நிற்போம் என்று தேஜஸ்வி அறிக்கை வெளியிட்டு உள்ளார் .

இதற்கு மாறாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி இத்தேர்தலில் 43 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி 71 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இருந்த நிலையில் தற்போது அதன் வெற்றி எண்ணிக்கை மிகவும் குறைந்து இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சியான பாஜக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 74 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது.

இதனால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநயாகக் கூட்டணி 117 இடங்களுடன் தற்போது பீகார் மாநிலத்தில் ஆட்சியை அமைக்கப் போகிறது. நிதிஷ்குமார் 4 ஆவது முறையாக அம்மாநில முதல்வராக பொறுப்பு வகிக்கப் போகிறார். இத்தேர்தலில் பாஜகவிற்கு 19.5% ஓட்டுகளும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 15.4% வாக்குகளும், தேஜஸ்வியின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு 23.3% வாக்குகளும், காங்கிரஸ்க்கு 9.5% வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன. இந்நிலையில் நோட்டாவுக்கு 1.7% வாக்குகள் கிடைத்து இருக்கின்றன என்ற தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.