தியேட்டர், ஓடிடி வெவ்வேறு தளங்கள், அறிக்கைப்போர் வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் திரையரங்குகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. இதனால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ரூபாய் 5 கோடி முதல் 100 கோடி வரை முதலீடு போட்டு திரைப்படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள் அந்த படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில தயாரிப்பாளர்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் தங்கள் திரைப்படங்களை வெளியிட முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையும் ஒப்பந்தங்களையும் செய்து வருகின்றனர். முதல் கட்டமாக கோலிவுட் படங்களில் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ’பென்குயின்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிடுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதேபோல் அனுஷ்கா நடித்த ’நிசப்தம்’ திரைப்படம் உள்பட பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே அவ்வப்போது அறிக்கைப் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீடு இரண்டும் வெவ்வேறு களங்கள். ஒருவேளை யாராவது இதற்கு கவலைப்படவேண்டுமென்றால் அது திரையரங்கம் சாராதவர்கள் தான். திரையரங்கங்களுக்காக ஒரே மூலதனம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமே. இந்த இரு தரப்பும் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருக்கவேண்டியவர்கள். எனவே அறிக்கை யுத்தம் செய்வதை விடுத்து இந்த பேரழிவைக் கடப்போம்’ என்று கூறியுள்ளார்.