ஹாலிவுட்டில் ரீமேக்காகிறதா ஒத்த செருப்பு..?! பார்த்திபன் விளக்கம்.

  • IndiaGlitz, [Tuesday,January 14 2020]

'ஒத்த செருப்பு' படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

மேலும், இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறார் பார்த்திபன். இந்தப் படத்தை நவாசுதீன் சித்திக்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது ஹாலிவுட்டில் இந்தப் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக ரசிகர் ஒருவருக்குப் பதிலளித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் பார்த்திபனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், கவலைப்படாதீர்கள் சார். நாம் பணம் செலவழிக்க வேண்டுமென்றால் அந்த ஆஸ்கர் நமக்கு வேண்டாம். நீங்கள் கோலிவுட்டில் இருக்கவேண்டியவர் இல்லை. ஹாலிவுட்டில் மார்ட்டின் ஸ்கார்செஸிக்கு அடுத்த நிலையில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு 'ஒத்தசெருப்பு' படத்தை ஆங்கிலத்தில் எடுக்க வேண்டும் சார். நீங்கள் கொண்டாடப்படுவீர்கள் என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பார்த்திபன், நன்றி.. ஏற்கெனவே அதற்கான பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.