நான்காவது முறையாக ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது: புதிய தேதி அறிவிப்பு

உலக அளவில் திரையுலகினர்கள் பெருமையாக கருதும் ஆஸ்கர் விருது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

92 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் 93ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்த திட்டமிட்டிருந்த இந்த விழா தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை மூன்று முறை விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முதல்முறையும், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவத்தால் இரண்டாம் முறையும், 1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவத்தால் மூன்றாம் முறையும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது