விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைமுன்னோட்டம்
- IndiaGlitz, [Saturday,January 27 2018]
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இந்த ஆண்டின் முதல் படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்சேதுபதியுடன் கெளதம் கார்த்திக் முதன்முதலில் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்
7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு, ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார்
வித்தியாசமான கெட்டப்பில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் இந்த படம் ஒரு அட்வெஞ்சர் காமெடி படமாக உருவாகியுள்ளது. பழங்குடி இனத்தலைவர் உள்பட அவர் இந்த படத்தில் 8 கெட்டப்புகளில் தோன்றியுள்ளார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் கௌதம் கார்த்திக் கூறியபோது, 'இந்த படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்தவர் விஜய்சேதுபதி. அவருக்கு எனது நன்றிகள். அவர் தான் இந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று தயாரிப்பாளர், இயக்குனரிடம் பரிந்துரை செய்தார். நல்ல மனிதநேயம் கொண்டவர். ஒரு கேரக்டருக்காக இவ்வளவு மெனக்கெடும் நடிகரை நான் இதுவரை பார்த்ததில்லை' என்று கூறியுள்ளார்.
அதேபோல் இயக்குனர் ஆறுமுககுமார் கூறியபோது, 'இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்ல விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை நான் ரசித்தேன். இதில் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. இன்னொரு நாயகனாக கவுதம் கார்த்திக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அனைவரும் ரசித்து மகிழும் படமாக உருவாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவின் போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் படமும் ரசிகர்களை கவரும் படமாக இருக்குமா? என்பதை வரும் வெள்ளி வரை பொருத்திருந்து பார்ப்போம்