ஒரு குப்பைக்கதை: குப்பையில் ஒரு மாணிக்கம்
நடன இயக்குனர் தினேஷ் நடிகராக அறிமுகமாகியிருக்கும் 'ஒரு குப்பைக்கதை' திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் பார்வையாளர்களை கவர்ந்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் பணிசெய்பவர் தினேஷ். கூவம் ஓரத்தில் குப்பத்தில் அம்மாவுடன் வாழும் தினேஷூக்கு இந்த வேலை காரணமாகவே திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வால்பாறையில் உள்ள மணிஷாவை நண்பர் ஒருவர் மூலம் அறிந்து பின்னர் திருமணம் செய்கிறார். குப்பத்திற்கு குடும்ப வாழ்க்கைக்காக வரும் மனிஷா, அந்த சுற்றுச்சுழலை வெறுக்கின்றார். இந்த நிலையில் கர்ப்பமாகி பெற்றோர் வீடு செல்லும் மனிஷாவை குழந்தை பிறந்தவுடன் புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார் தினேஷ். புதிய வீட்டில் மனிஷாவுக்கு ஏற்படும் ஒரு மனத்தடுமாற்றத்தால் அவரது வாழ்க்கையே திசை திருப்பிவிடுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
நடன இயக்குனர் தினேஷ் ஒரு அறிமுக நடிகர் என்பதே தெரியாமல் பத்து படங்கள் நடித்த நடிகர் போன்று மிக இயல்பாக ஓவர் ஆக்சன் இல்லாமல் நடித்துள்ளார். குப்பை அள்ளும் வேலையை தான் விரும்பி செய்வதாக கூறுவதாகட்டும், தனது வருங்கால மாமனாரிடம் தான் பார்க்கும் வேலையை மறைக்காமல் சொல்வதிலும் தேர்ந்த நடிப்பு. மன்னிக்கும் குணமே மனித குணங்களில் உயர்ந்தது என்பதை கிளைமாக்ஸில் வசனமே இல்லாமல் தனது கண்களில் கூறும் அவரது நடிப்பு புரிந்தவர்களுக்கு மட்டும் ஆச்சரியம் ஏற்படும்.' கோலிவுட் திரையுலகிற்கு இன்னொரு நல்ல ஹீரோ கிடைத்துவிட்டார் என்று சந்தோஷப்படலாம்.
வழக்கு எண் 18/9, ஆதலினால் காதல் செய்வீர் படங்களுக்கு பின்னர் மனிஷாவுக்கு கிடைத்த நல்ல கேரக்டர். ஒருசிலருக்கு மட்டுமே வரும் அந்த மனத்தடுமாற்றத்தையும், அதன் பின்னர் தான் எடுத்த முடிவை எண்ணி வருந்துவதும் என பக்குவமான நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் கண்களை குளமாக்கிவிட்டார் மனிஷா
யோகிபாபுவை இயக்குனர் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். மிகக்குறைந்த நேரம் வந்தாலும் கலகலப்பாக்கியுள்ளார். பணக்கார இளைஞர் அர்ஜூன் கேரக்டரில் நடித்துள்ள சுஜோ மேத்யூஸ், தினேஷின் அம்மா கேரக்டரில் நடித்தவர், என படத்தில் குறைந்த அளவே நடிகர்கள் இருந்தாலும் அனைவரும் தங்கள் பங்கை சாரியாக செய்துள்ளனர்.
ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளது. அதேபோல் தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் அருமை. மகேஷ் முத்துசாமியின் கேமிரா, கூவம் அருகே உள்ள குப்பத்தை அழகாக படம்பிடித்துள்ளது.
ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவியான ஒரு பெண் தவறான முடிவெடுத்தால் அந்த குடும்பமே நொறுங்கிவிடும் என்பதை மிக அழுத்தமாக, இயல்பாக, சினிமாத்தனம் இல்லாமல் படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் காளி ரெங்கசாமி. அவருடைய நல்ல முயற்சிக்கு ஒரு பாராட்டு.
தினந்தோறும் நாம் செய்தித்தாளில் பார்க்கும் ஒரு செய்திதான் இந்த படத்தின் கதை என்றாலும், அதில் உள்ள வலி, வேதனைகளை அழுத்தமான காட்சிகள் மூலம் பதிவு செய்துள்ளார். இந்த படத்திலும் ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் குறைகள் இல்லாத படத்தை ஆஸ்கார் விருது வாங்கியவர் கூட இயக்க முடியாது. அதனால் இந்த படத்தில் உள்ள சின்னச்சின்ன குறைகளை சுட்டிக்காட்ட விரும்பாமல் ஒரு நல்ல படத்தை குடும்பத்துடன் குறிப்பாக ஒவ்வொரு கணவன், மனைவியும் பார்க்க வேண்டிய படம் என்பதை மட்டும் அழுத்தமாக சொல்ல முடியும்
மொத்தத்தில் 'குப்பையில் எப்போதாவதுதான் மாணிக்கம் கிடைக்கும். அப்படி ஒரு மாணிக்கம் இந்த படம்.
Comments