இயக்குனர் வேலு பிரபாகரன், ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ உள்ளிட்ட புரட்சிகரமான திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர், 2009ல் வெளியான அவரது ‘காதல் கதை’ படம் செக்ஸ் பற்றி துணிச்சலாகப் பேசியது. ஆனால் பெருமளவில் ரசிகர்களால் ஒரு போர்ன் படமாகவே பார்க்கப்பட்டது. அந்தப் படம் வெளியானபோது “இந்தியாவில் பெண்ணுடல் மூடி மறைக்கப்படுவதால்தான் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. எனவே பெண்ணுடல் மீதான கவர்ச்சியைக் குறைக்க அதை சாதாரணமான ஒன்றாக ஆக்க வேண்டும். வெளிப்படையாக காட்டத் தொடங்க வேண்டும்” என்று பேச ஆரம்பித்தார். இந்தக் கருத்து அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ படத்திலும் அதே கருத்தைப் பேசுகிறார். காண்பிக்கிறார். செக்ஸ் பற்றிய மேலும் பல கருத்தக்களைப் பேசுகிறார். செக்ஸ் பரவலாக்கப்பட வேண்டும். அதன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள புனிதம் உடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தக் கருத்துக்கள் பலருக்கு சர்ச்சையாகத் தோன்றலாம். சிலருக்கு புரட்சிகரமானவையாகத் தெரியலாம். ஒருவர் இவற்றை முழுவதுமாகவோ பாதியாகவோ ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அது அவரவர் பார்வையைப் பொருத்தது.
’ஒ.இ.கா.டை’ படத்தின் மூலம், வேலு பிரபாகரன், தன் சொந்த வாழ்க்கைக் கதையைப் பதிவுசெய்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது ஆனால் படத்தின் முடிவு அப்படிச் சொல்லலாமா என்று சந்தேகிக்க வைக்கிறது. ஆனால் இது உண்மையும் புனைவும் கலந்த அவரது வாழ்க்கைக் கதைதான் என்று எடுத்துக்கொண்டால், தன் வாழ்க்கையை ஒளிவு மறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார். தான் செய்த பிழைகளை, குற்றங்களைக் கூட பதிவுசெய்திருக்கிறார். அதே நேரத்தில் தன் வாழ்க்கையில் நிகழந்த அனைத்து உண்மைகளையும் உங்களிடம் சொல்லிவிடவில்லை என்ற உண்மையையும் பதிவு செய்கிறார். இந்திய சினிமாவில் யாருக்கும் இருந்திடாத இந்தத் துணிச்சலுக்காக அவரைப் பாராட்டலாம்.
படத்தில் வரும் இயக்குனர் வேலு பிரபாகரன் தன் கடந்த காலத்தை திரைப்படமாக எடுக்கிறார். விடலை வயதில் ஒரு பெண்ணைக் காதலித்தது அந்தக் காதல் கைகூடாமல் போனபோது அவளைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று நினைத்தது, பிறகு ஏற்கனவே ஒருவருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நடிகை விஜயாவை காதலித்து அவரை வற்புறுத்தி திருமணம் செய்தது, பிறகு அவரை விட்டுப் பிரிந்தது, விஜயாவின் அண்ணன் மகளான பத்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பிறகு வேலு பிரபாகரனின் பொருளாதார சூழல் காரணமாக அந்தப் பெண் அவரை கைவிட்டுச் சென்றது ஆகியவற்றைப் படமாக எடுக்கிறார். அதன் மூலம் காதல் என்பதன் மீது கற்பிக்கப்பட்ட புனிதங்களை உடைக்க வேண்டும் என்ற தன் கருத்தைப் பதிவு செய்கிறார்.
படத்துக்குள் படமாக வேலு பிரபாகரனின் முன்கதை சொல்லப்படுகிறது. அந்தக் கதையில் விஜயாவாகவும் பத்மாவாகவும் நடிக்கிறார் நடிகை பொன்சுவாதி. நிஜத்தில் அந்தப் பெண் மீதும் மையல்கொள்கிறார் வேலு பிரபாகரன். அந்தக் காதலுக்கு என்ன ஆனது என்பது மீதிக் கதை.
வேலு பிரபாகரனின் நிஜக் கதையில் நிகழ்காலம் படமாகவும், கடந்த காலம் படத்துக்குள் படமாகவும் வருகிறது. இரண்டும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. எது நிகழ்காலம் எது கடந்த காலம். எது உண்மை எது கற்பனை அல்லது உண்மை அடிப்படையிலான கற்பனைக் கதை என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் குழப்பமாக இருக்கிறது. இரண்டிலும் சொல்லப்படும் கதை நீட்டி முழக்கி சொல்லப்படுகன்றது. எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் பொறுமையை சோதிக்கும் அளவில் திரைக்கதை அமைந்திருக்கிறது.
படத்தில் ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேசுகிறார் வேலு பிரபாகரன். இந்து மதப் புராணக் கதைகளில் உள்ள பெண்ணடிமைத்தனக் கருத்துக்களைச் சொல்லி அவற்றை சாடுகிறார். செக்ஸ் சாதாரணமானதாக, எளிதாக கிடைப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் . செக்ஸ், அரிதான விஷயமாக இருக்க கூடாது அப்படி இருப்பதால்தான் செக்ஸ் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன என்கிறார். இதை வலியுறுத்துவதற்காகவே படம் நெடுக செக்ஸ் காட்சிகள வைத்திருக்கிறார் போலிருக்கிறது.
வேலு பிரபாகரன், படத்தில் பொன் சுவாதியுடனும் படத்துக்குள் எடுக்கப்படும் படத்தில் பத்மாவாக நடிக்கும் பொன்சுவாதியுடனும் உறவு கொள்ளும் காட்சிகள் அதிகம் வருகின்றன. இது போன்ற காட்சிகள் மூலம் செக்ஸையும் பெண்ணுடலையும் காட்சிப் பொருளாக ஆக்குவது சரியா என்ற கேள்வி எழுகிறது.
படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அமெச்சூர்தனமான நடிகர்கள், தரமற்ற ஒளிப்பதிவு என்று காட்சி அனுபவமாகவும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இளையாராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில் வேலு பிரபாகரன், துணிச்சலாக தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். யாருக்கும் பயப்படாமல் தன் கருத்துக்களை துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’படத்தில் பாராட்டுக்குரியவை. அதைத் தவிர படத்தில் உள்ள செக்ஸ் காட்சிகள் அவற்றுக்கான ரசிகர்களை திருப்திபடுத்தலாம். இந்தப் படத்தை ரசித்துப் பார்க்கவோ, மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கவோ இந்தக் காரணங்கள் போதாது.
Comments