ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15ஆம் தேதியில் இருந்து சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த செய்தியை விட அவர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அரசியல் குறித்த கருத்து கடந்த ஐந்து நாட்களாக டிரெண்டில் உள்ளது. ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கிட்டத்தட்ட அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சற்று முன்னர் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியபோது, 'ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர், சிறந்த ஆன்மீகவாதி. அவர் அரசியலுக்கு வரலாம், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் தமிழக மக்கள். மக்கள்தான் எஜமானர்கள், அவர்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்' என்று கூறினார்.

ஒபிஎஸ் அணியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி இதுகுறித்து கூறியபோது, 'இன்று ரஜினிகாந்த் தமிழக அரசியல் பற்றி பேசி இருக்கிறார். ஒரு வார்த்தை பேசியதற்கே அவரால் தாங்க முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்து பார்க்கட்டும். இங்கு எவ்வளவு சோதனைகள் ஏச்சுகள், பேச்சுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் வந்து பார்க்கட்டும். நடிப்பு தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர் உணர்வார்' என்று கூறினார்.