ஜனாதிபதியுடன் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் சந்திப்பு. கோரிக்கைகள் என்ன?
- IndiaGlitz, [Tuesday,February 28 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா ஆதரவு அணி 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும், ஓபிஎஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்பிக்களின் ஆதரவு உள்ளதால் வலுவாக அணியாக காணப்படுகிறது. மேலும் அதிமுகவின் மூத்த தலைவர்களான பி.எச்.பாண்டியன், பொன்னையன், மதுசூதனன், கருப்பசாமி பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் ஓபிஎஸ் அணியில்தான் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணியின் 12 எம்பிக்கள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று அவர்கள் குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடியரசு தலைவரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்பி, 'மருத்துவமனையிலிருந்த ஜெயலலிதாவை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. அவருடைய மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள், குளறுபடிகள் உள்ளன. ஜெயலலிதா மரணம் பற்றி மத்திய அரசு சார்பில் விசாரிக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம். ஜெயலலிதா மரணத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளியே வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை செங்கோட்டையன் பார்த்ததாக கூறுவது பொய். இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்தார்.