ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?
- IndiaGlitz, [Tuesday,February 14 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பால் முதல்வர் ரேஸில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த முதல்வர் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியா அல்லது ஓ,.பன்னீர்செல்வமா? என்ற நிலை உள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஜெயலலிதாவின் மெரீனா நினைவகத்திற்கு சென்றுள்ளார்.
இதில் திடீர் திருப்பமாக ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வந்துள்ளார். முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தீபா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சந்தித்தனர். ஏற்கனவே தீபாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வந்து தியானம் செய்ததால் பெரிய திருப்பம் தமிழக அரசியலில் ஏற்பட்டது. அதேபோல் இன்றும் ஓபிஎஸ் அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்துள்ளது மட்டுமின்றி தீபாவையும் சந்தித்துள்ளார். எனவே நாளை என்ன திருப்பம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்