எதிர்தரப்பு வேட்பாளர்கள் கைகுலுக்கி, வாழ்த்து கூறிய காட்சி...! தொண்டர்கள் உற்சாகம்...!

  • IndiaGlitz, [Friday,March 19 2021]


கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக விஜய் வசந்த்-ம், அவரை எதிர்த்து பாஜக சார்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள்.

விஜய் வசந்த் மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச். வசந்தகுமார் அவர்களின் மகனும், திரைப்பட நடிகர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்காக, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விஜய் வசந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் ராஜனும் மனு தாக்கல் செய்ய வந்தார். தற்சமயம் அவர்களின் எதிர்க்கட்சி போட்டியாளரான பாஜக சார்பாக எம்.ஆர்.காந்தி மனு தாக்கல் செய்ய வந்தவருடன், பொன். ராதாகிருஷ்ணனும் வந்துள்ளார்.

இந்தநிலையில் போட்டியாளர்கள் விஜய் வசந்தும், பொன்னரும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி ஏற்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் அமைதியாக சந்தித்து, நலம் விசாரித்து வாழ்த்துக்களையும், பரிமாறிக்கொண்டனர். இவர்களின் இந்த செயல் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

எதிர்தரப்பினரை குறைகூறியும்,அவதூறாகவும் பேசும் இந்நேர அரசியல் சூழலில், விஜய் வசந்த் எதிர்க்கட்சி போட்டியாளருடன் இயல்பாகவும், நன்னடத்தையுடன் நடந்துகொண்டது அரசியல் கட்சியினர் மத்தியில் நல் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.