நாளை பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]


தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

அதேபோல செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. அதில்

1.வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளி வேலை நாட்கள்.

2. 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடைபெறும்.

3. ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்க வேண்டும்.

4. போதிய இடவசதி இல்லையென்றால் 9-11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

5. உயர்நிலை பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தினமும் செயல்பட வேண்டும். போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 ஆம் வகப்பு சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும்.

6. தனியார் பள்ளிகளில் மட்டும் வகுப்புக்கு வர இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

7. மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.

8. வகுப்புக்குள் செல்லும் முன் மாணவர்கள் கிருமிநாசினி, சோப் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

9. பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் செப் 1 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்.

10. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

11. PET, NSS, NCC தொடர்பான செயல்பாடுகள் பள்ளி வளாகத்தில் செயல்படுதல் கூடாது.

இந்நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பள்ளிகள் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ளவும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் கொரோனா காலத்தில் பாடத்திட்டங்கள் குறைக்கப் பட்டாலும் அடிப்படையான பாடங்கள் தவறாமல் கற்றுத் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மாஸ்க் இருப்பு, கிருமிநாசினி போன்ற பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.