திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: வாபஸ் பெற்றது தமிழக அரசு!
- IndiaGlitz, [Friday,January 08 2021]
திரையுலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதனால் பொங்கல் தினத்தில் வெளிவரும் ’மாஸ்டர்’ மற்றும் ’ஈஸ்வரன்’ திரைப்படங்களின் வசூல் எகிரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை எப்படி அனுமதிக்கலாம் என தலைமைச் செயலருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அதுமட்டுமின்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் சென்னை ஐகோர்ட் ஆகிய நீதிமன்றங்களும்100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கு கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு 100 சதவீத இருக்கை அனுமதிக்கான அரசாணையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட உத்தரவில், ‘தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்றும், மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளுக்கு செல்லும் பார்வையாளர்கள் முக கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.