திருமணம் செய்வதாக ஆணை ஏமாற்றிய ஆண்: மேட்ரிமோனியல் நூதன மோசடி
- IndiaGlitz, [Wednesday,April 10 2019]
சென்னை வடபழனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக பெண் தேடினார். இந்த நிலையில் ஒரு ஆன்லைன் மேட்ரிமோனியில் அவர் தனது பெயர்ரை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த ஹரிணி என்ற பெண், ஆனந்துடன் ஆன்லைனில் அறிமுகமாகி அவரை திருமணம் செய்யவும் சம்மதித்தார். மேலும் தனக்கு ஒருசில குடும்ப பிரச்சனைகள் இருப்பதாகவும், அதற்காக கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும், ஹரிணி கேட்டுள்ளார். இதனை நம்பிய ஆனந்த் ஹரிணியின் வங்கி கணக்கில் 70 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
இதன்பின்னர் ஹரிணி, ஆனந்தை தொடர்பு கொள்ளவில்லை. ஹரிணியின் மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த ஆனந்த், பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் ஆனந்தை மீண்டும் தொடர்பு கொண்ட ஹரிணி, அவருக்கு திருமணம் ஆனது தெரியாமல் மீண்டும் பண உதவி வேண்டும் என்று கோரியுள்ளார். இம்முறை சுதாரித்து கொண்ட ஆனந்த் பணத்தை நேரில் வந்து வாங்கிகொள்ளுமாறு ஆனந்த் கூறியுள்ளார். ஆனால் ஹரிணி தன்னால் நேரில் வரமுடியாது என்றும், தன்னுடைய சித்தப்பாவை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பணம் வாங்க வந்தவரை போலீஸ் உதவியுடன் ஆனந்த் பிடித்தார். பிடிபட்டவரிடம் வடபழனி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தபோது பிடிபட்ட நபர் பெரம்பூரை சேர்ந்த செந்தில் என்றும், செல்போன் செயலிகளை பயன்படுத்தி பெண் குரலில் ஆனந்தை ஏமாற்றி பணம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.