ரம்மி மட்டுமின்றி அனைத்து சூதாட்ட கேம்ஸ்களையும் தடை செய்ய வேண்டும்: ராகவா லாரன்ஸ் பட இயக்குனர்!
- IndiaGlitz, [Sunday,July 26 2020]
ரம்மி மட்டுமின்றி ஆன்லைனில் விளையாடப்படும் கிரிக்கெட் உள்பட அனைத்து சூதாட்ட விளையாட்டுகளையும் தடைசெய்ய வேண்டுமென ராகவா லாரன்ஸ் நடித்த ’மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற படத்தை இயக்கிய சாய்ரமணி என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆன்லைனில் ஏராளமான நல்ல விஷயங்கள் கொட்டிக் கிடந்தாலும் ஒரு சில ஆபத்தான விஷயங்களும் உண்டு என்பதும் தெரிந்தது. அந்த வகையில் இளைஞர்களின் பணத்தை, நேரத்தை மட்டுமன்றி உயிரையும் பறிக்கும் ஒரு அம்சம்தான் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள்.
ரம்மி உள்பட பல விளையாட்டுக்கள் பலரது நேரத்தையும் கொல்வதோடு அவர்களது உயிரையும் பறிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டுகளில் முதலில் வருமானம் வருவது போல் தோன்றினாலும் பின்னர் அதற்கு அடிமையானவுடன் ஏராளமான பணத்தை இழந்து பலர் தற்கொலையும் செய்து உள்ளனர் என்பதுதான் உண்மை.
இது குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நீதிமன்றம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட கேம்ஸ்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஏற்கனவே தெலங்கானா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து ராகவா லாரன்ஸ் நடித்த ’மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை இயக்கிய சாய்ரமணி கூறியபோது ’ஆன்லைன் விளையாட்டுகளின் பாதிப்பை உணராத அரசியல்வாதிகள் இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில் நீதிமன்றம் இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதற்கு நான் தலைவணங்குகிறேன். உடனடியாக ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தால் மட்டுமே இளைஞர்களைக் காப்பாற்ற முடியும். இளைஞர்களை சீரழிக்கும் ஒன்றாக ஆன்லைன் சூதாட்ட கேம்ஸ்கள் உள்ளன. இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் சீரழிப்பதோடு பலர் தற்கொலை செய்து கொள்ளவும் காரணமாக உள்ளது. மிழகத்தில் கூட ஒரு சிலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆகி தற்கொலை செய்து கொண்டனர். எனவே இதன் அபாயத்தை உணர்ந்து உடனடியாக இந்த கேம்ஸ்களுக்கு தடை செய்ய வேண்டும் என்று இயக்குனர் சாய்ரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் செயலிகள் மூலம் சூதாட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும் தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.