கண்ணீர் சிந்தாமல் வெங்காயம்… எகிப்து வெங்காயத்தின் வருகையால் விலை குறையுமா!!!
- IndiaGlitz, [Thursday,October 22 2020]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் வெங்காயத்தின் விலை ரூ.100 ஐ தொடும் அளவிற்கு அதிகரிப்பது ஒரு வழக்கமான விஷயமாகவே இருந்து வருகிறது. இதற்கு வியாபாரிகளின் பதுக்கல்களே காரணம் எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும் இந்தக் காலக்கட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்து, அதன் காரணமாக விலையேற்றம் அதிகரிப்பதும் தொடர்ந்த வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற ஒரு சில வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக அங்கு பயிரிடப்பட்டு இருந்த காரிஃப் பட்டத்து பெரிய வெங்காயங்கள் முழுவதும் அழுகி போனதாகத் தகவல் கூறப்படுகிறது. இந்தியாவிற்கு பெரும் அளவிலான பெரிய வெங்காயங்கள் இந்த வட மாநிலங்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால் தற்போது அங்கு பெய்த கனமழை காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து முற்றிலும் தடைபட்டு இருக்கிறது.
இந்நிலையில் தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஏற்கனவே வெங்காயத்தின் வரத்து குறைந்து இருக்கும் காரணத்தைப் பயன்படுத்தி தற்போது தென் மாநில வியாபாரிகளும் விலையை அதிகமாக்கவே முயற்சிக்கின்றனர். இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன.
எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநோகத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே இந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையையும் மத்திய அரசு நீக்கியிருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது வாங்க வேண்டிய சில முக்கிய சான்றிதழ் நடைமுறைகளையும் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் போது பூச்சிக்கொல்லி மருந்து நீக்க சான்றிதழ் பெற வேண்டும். தூய்மை ஒழுங்கு விதிகளின்படி இந்த நடைமுறையைப் பின்பற்றி சான்றிதழை பெற்று இருந்தால் மட்டுமே இந்தியாவில் வெங்காயத்தை விற்பனை செய்ய முடியும். ஒருவேளை சான்றிதழ் பெறாமல் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தால் அவற்றை பறிமுதல் செய்வதற்கும் அதிகாரம் இருரக்கிறது. ஆனால் இந்த நடைமுறையை தற்போது மத்திய அரசு விலக்கி இருக்கிறது.
மேலும் தெற்காசிய நாடுகளில் இருந்து எளிமையாக வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வசதியாக கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி போடப்பட்ட வெங்காய ஏற்றுமதி தடை சட்டத்தையும் மத்திய அரசு விலக்கி இருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் 32 மெட்ரிக் டன் அளவுள்ள பெரிய வெங்காயங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வெங்காயங்கள் தற்போது மதுரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ.70 வரையிலும் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக வெங்கயாம் என்றாலே கண்ணீர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு காரம் உடையது வெங்காயம். ஆனால் எகிப்து வெங்காயத்தில் காரம் குறைந்து இருப்பதோடு அளவும் சற்று பெரிதாகவே இருக்கும். ஒரு வெங்காயம் 200-600 கிராம் வரைக்கும் கூட இந்த வெங்காயங்கள் இருக்கிறது. அப்படி விற்கப்படும் வெங்கயாத்தால் ஓரளவிற்கு விலையேற்றத்தை தவிர்க்க முடியும் என வியாபாரிகள் கருதுகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு குறைவு என்பதே நிதர்சனம்.
ஆனாலும் தற்போது தமிழகத்தில் ரூ.60, ரூ.70, ரூ.80 என விற்கப்படும் வெங்காயங்கள் இன்னும் சில நாட்களில் விலை அதிகரிக்கவே செய்யும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல ராபி வெங்காயத்தை உரிய விலையில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசின் விற்பனைக் கிடங்குகள் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கடைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரை 1400 கோடி மதிப்புள்ள வெங்காயம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக பிபிசி புள்ளி விவரம் வெளியிட்டு இருக்கிறது. ஆனால் சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.3200 கோடிக்கும் அதிகமாக வெங்காயம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆக இந்த ஆண்டு வெங்காயத்தின் ஏற்றுமதியும் குறைவு மற்றும் வரத்தும் குறைந்து இருக்கிறது. இந்நிலையில் வெளிநாட்டு வெங்காயங்களை வாங்கி கண்ணீர் வராமல் சமைக்க அரசு வழிவகுக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.