செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு சிறைதண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
- IndiaGlitz, [Wednesday,April 07 2021]
செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது
நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா பங்குதாரராக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக ஒன்றரை கோடி ரூபாயை ரேடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடனாகப் பெற்றது
2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தது. ஆனால் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு திருப்பித் தரவில்லை. இந்த நிலையில் மேஜிக் நிறுவனம் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகி திரும்பியதை அடுத்து ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் சற்று முன் தீர்ப்பாகி உள்ளது. இந்த தீர்ப்பில் செக் மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகிய மூவருக்கும் ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
மூன்று வருடத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை என்பதால் விதிமுறையின்படி மேல்முறையீடு செய்யலாம் என்ற வகையில் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 3 பேர் தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறைமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று மாலை முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது