ஜுன் 1 முதல் நாடு முழுவதும் ‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ கார்டு திட்டம் நடைமுறை - மத்திய அமைச்சர் அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,January 21 2020]
‘ஒரு நாடு, ஒரு ரேஷன்’ அட்டை திட்டம் ஜுன் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
மத்திய உணவு வழங்கல் துறையின் மூலமாக இந்தியா முழுவதும் மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்தப் பொருட்களை மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள அரசு கடைகளில் பெற்று வந்தனர். தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளி ஒரே ரேஷன் அட்டையை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்த முடியும். அடிக்கடி இடமாற்றம் செய்பவர்களுக்கும், வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இத்திட்டம் மிகச் சிறந்த பயனை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
2020 புத்தாண்டின் போது ‘ஒரே நேஷன், ஒரே ரேஷன்’ அட்டைத் திட்டம் இந்தியாவின் 12 மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தப் புதிய அட்டையைப் பயன்படுத்தி இந்த 12 மாநிலங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் தங்கள் ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.