பப்ஜி சவாலில் தோற்ற 16 வயது மாணவன் தற்கொலை… பரிதாபச் சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வருகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தமிழக அரசு உட்பட பல மாநிலங்கள் தடைவிதித்து இருக்கின்றன. இந்நிலையில் பப்ஜி கேம் விளையாடிய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் சக நண்பர்கள் போட்ட சவாலில் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளான். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு கடந்த செப்டம்பர் முதல் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் செல்போனில் உள்ள விபிஎன் வசதியைப் பயன்படுத்தி செல்போனில் உள்ள லோகேஷை மாற்றி விளையாட முடியும். இதைப் பயன்படுத்தி சில இளைஞர்கள் இன்றும் பப்ஜி விளையாடி வருகின்றனர். இப்படித்தான் ஒசூர் பகுதியின் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ரவி என்ற 16 வயது சிறுவன் பப்ஜி கேம் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் சக நண்பர்களுடன் ஏற்பட்ட சவாலில் தோற்ற அவர் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

முதலில் இதை சாதாரணமாக கருதிய போலீசார் அடுத்த அடுத்த விசாரணையில் நண்பர்களுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே தந்தையை இழந்து இருந்த ரவிக்கு வாய் பேசமுடியாத தாய் மற்றும் ஒரு சகோதரர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் தனது மகனின் இறப்பை பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளார் அந்த வாய்பேச முடியாத தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.