ரூ.1.5 கோடி மோசடி: நடிகர் விமல் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விமல் ரூபாய் 5 கோடி மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தற்போது மேலும் ஒரு தயாரிப்பாளர் நடிகர் விமல் மீது ரூபாய் 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
வணக்கம். "மெரினா பிக்சர்ஸ்" என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் துவங்கி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "லிங்கா", விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான "புறம்போக்கு" உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களை பெறுவதற்காக 2016 ஆம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் நெருக்கமான நட்பு உருவானது.
அந்த சமயத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்களான "நேற்று இன்று", “ இஷ்டம்” , “புலிவால்” , “ஜன்னல் ஓரம்" ஒரு ஊருல இரண்டு ராஜா" "காவல்", ”அஞ்சல”, "மாப்பிளை சிங்கம்" ஆகிய படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியதாலும், அவருக்கு மார்க்கெட் இல்லாததாலும் விமலை வைத்து படம் தயாரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராததாலும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவக்கி பாதியில் கைவிடப்பட்ட "மன்னர் வகையறா" என்ற படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி தேவை என்றும் கேட்டு கொண்டார்.
நானும் என் நண்பர் கோபியை அறிமுகம் செய்து வைத்து ரூ.5 கோடி பணம் கடன் வாங்கி கொடுத்தேன். இந்நிலையில் 30.08.2017 ஆம் ஆண்டு சாலிகிராமத்திலுள்ள சிகரம் மினி ஹாலில் நடந்த நடிகர் விமலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் "களவாணி-2" என்ற படத்தை தான் தயாரிக்க இருப்பதாக மேடையில் அறிவித்தார். அப்போது களவாணி படத்தின் இயக்குனர் சற்குணமும் உடன் இருந்தார்.
அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி என்னை சந்தித்த விமல் "களவாணி-2" படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை வாங்கி கொள்ளுமாறும், குறுகிய காலத்தில் படத்தை முடித்து தந்து விடுவதாகவும் கூறியதையடுத்து அக்டோபர் 14 ஆம் தேதி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.1.5 கோடியை முன்பணமாக கொடுத்தேன். ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை வைத்து "களவாணி-2" படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்க வில்லை. ஒரு கட்டத்தில் "களவாணி-2" படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்க இருப்பதாகவும், என்னிடம் முன்பணமாக பெற்ற ரூ.1.5 கோடியை பட வெளியீட்டிற்கு முன்பு, தனக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தின் மூலம் கொடுத்து விடுவதாக உறுதி கூறியதை நம்பி நானும் அமைதி காத்தேன்.
"களவாணி-2" படத்தின் வெளியீட்டு தேதி உறுதியான நிலையில் விமலிடமிருந்து எனக்கு வர வேண்டிய ரூ.1.5 கோடி பணம் வராததால், என் அலுவலக ஊழியரும், தயாரிப்பு மேற்பார்வையாளருமான கமரன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து "களவாணி-2" பட வெளியீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றேன். இதனால் படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் என் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரை விசாரித்த அதிகாரிகளிடம் நான் வைத்திருந்த ஆவணங்களை காட்டி, களவாணி 2 படத்தின் காப்பி ரைட் உரிமை என்னிடம் உள்ளது என்பதை விளக்கிய போது, அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொண்ட காவல் அதிகாரிகள், நடிகர் விமலை உடனடியாக விசாரணைக்கு வரும்படி அழைத்தனர்.
உடனடியாக ஒரு அரசியல் பிரபலத்தை தொடர்பு கொண்ட விமல், எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும், பட வெளியீட்டிற்கு உதவும் படியும் கேட்டதால் 13.05.2019 அன்று சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டோம். இந்த செய்தி அன்றைய நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளியானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எனக்கு தர வேண்டிய பணத்தை நடிகர் விமல் தராததால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து, புகாரின் அடிப்படையில் நிர்வாகிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் எனக்கு சேர வேண்டிய ரூ.1.5 கோடியை உரிய வங்கி வட்டியுடன் திருப்பித் தந்து விட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதன் அடிப்படையில் ரூ.2.70 கோடிக்கான காசோலையை விமல் என்னிடம் வழங்கினார்.
அதனை வங்கியில் செலுத்திய போது அந்த காசோலை உரிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காகவும், என் நண்பர் கோபி என்பவர் விமல் மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடி புகாரை திசை திருப்புவதற்காகவும் விமலை நான் ஏமாற்றிவிட்டதாக பொய்யான புகாரை தங்களிடம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், தவறான, அவதூறான கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வருகிறார். எனவே ஐயா அவர்கள் நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
இவ்வாறு தயாரிப்பாளர் சிங்காரவேலனின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments