பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் 10 முதல் 17 வரை சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் தங்களை தாங்களே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் சுகாதாரத்துறையை அணுகவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது.

இதனை அடுத்து சென்னை பீனிக்ஸ் மாலுக்கு அந்த ஒரு வாரத்தில் சென்று வந்த 3,300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் சமீபத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சென்னை பீனிக்ஸ் மால் சென்று வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செஞ்சி பகுதியை சேர்ந்த இவர் கடந்த மார்ச் மாதம் பீனிக்ஸ் மால் சென்று வந்ததாகவும், இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து பீனிக்ஸ் மால் சென்று வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.