மீண்டும் ஒரு குஜராத்தி தப்பியோட்டம்: நடிகர் சித்தார்த் காட்டம்

  • IndiaGlitz, [Monday,September 24 2018]

வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் பெற்றுவிட்டு இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிவிடும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தொடர்ந்து சமீபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் தற்போது குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிதின் சந்தேசரா என்பவரும் பல்வேறு வங்கிகளில் ரூ. 5,000 கோடி பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் நைஜீரியா நாட்டிற்குக் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ' மீண்டும் ஒரு குஜராத்தி சட்டவிரோதமாக தப்பி ஓடிவிட்டார். நீங்கள் இந்தியாவுக்கு கறுப்புப் பணத்தை கொண்டு வருவதாக கூறினீர்கள். ஆனால், தற்போது அதற்கு எதிர்மறையாக நடந்து வருகிறது. சாதாரண இந்திய குடிமகனின் பண மதிப்பு நீக்கப்படுகிறது'' என்று காட்டமாக கூறியுள்ளார்.

இந்திய, நைஜீரிய நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் இல்லாததால் நிதின் சந்தேசராவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.