மீண்டும் ஒரு ரசிகர் மரணம்.. 'புஷ்பா 2' படத்திற்கு என்ன ஆச்சு?
- IndiaGlitz, [Wednesday,December 11 2024]
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ரிலீஸ் ஆன அன்று கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் பலியான நிலையில், நேற்று திரையரங்கில் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான ’புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்பதும், கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ரேவதி என்ற பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் திடீரென அல்லு அர்ஜுன் வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நெரிசலில் சிக்கி ரேவதி பலியானார். அவருடைய மகனும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சியை தொடர்ந்து, ஆந்திராவில் உள்ள ராயதுர்கம் என்ற நகரில், திரையரங்கில் ’புஷ்பா 2’ படத்தை பார்த்துக் கொண்டிருந்த 40 வயது மத்யானப்பா என்பவர் உடல் நல குறைவால் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இந்த தகவல் அவருடைய உறவினருக்கு கிடைத்ததுடன், தியேட்டருக்கு அவர்கள் விரைந்தனர். படம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் உயிரிழந்ததை கூட கண்டுகொள்ளாமல், படம் தொடர்ச்சியாக திரையிடப்பட்டதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த தியேட்டருக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் குடும்பத்தை சமாதானப்படுத்தியதோடு, படத்தை திரையிடுவதையும் நிறுத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
‘புஷ்பா 2’ படத்தால் அடுத்தடுத்து இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.