'பருத்திவீரன்' விவகாரம்: சமுத்திரக்கனி, பொன்வண்ணனை அடுத்து இன்னொரு இயக்குநரின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக ’பருத்திவீரன்’ விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன். சினேகன் உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் அமீருக்கு ஆதரவாக பதிவு செய்தனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் கரு பழனியப்பன் தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:
"பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்குரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள். சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள்...நிற்க.
இந்த அறிக்கை பருத்திவீரன் படம் பற்றி அல்ல.ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி, பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி. எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே, நான் சொல்லுகிறேன். ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர் தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்லுகிறேன்.
இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி. இந்நாள் முன்னாள் சங்க நிர்வாகிகளைக் கேட்டாலும் இதையே சொல்வார்கள் .பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம் ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் என் காசில் தொழில் பழகியவன் என்றும் கேரக்டர் அசாசினேஷன் செய்வது அயோக்கியத்தனம். ஞானவேலின் எள்ளல் எகத்தாள திமிர் பேட்டியில், நானும் கார்த்தியும் பருத்தி வீரனுக்கு பிறகு நிறைய படம் எடுத்து விட்டோம் 25 படங்களை கடந்து விட்டோம் ஆனால் அமீர் ஓடாத குதிரை தோற்றுப் போனவர் என்கிறார்.
அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம் ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும் உடன் களத்தில் பணியாற்றியவர்களும் ரசிகர்களும் அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். காலம் அப்படித்தான் கணக்கில் வைத்துக் கொள்ளும்.
இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி. இந்தக்கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூறு குறள்கள் படித்த சிவக்குமார் தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு, சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன? 18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா?
நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார்"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை "என்ற குறளையும் படித்து இருப்பார். வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர், ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் .சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
— கரு பழனியப்பன் (@karupalaniappan) November 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments