நடிகர் எஸ்.வி.சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத தண்டனை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- IndiaGlitz, [Friday,March 15 2024]
நடிகர் எஸ்வி சேகருக்கு எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்த நிலையில் இந்த வழக்கில் எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளரை சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் எஸ்வி சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து எஸ்.வி சேகர் மீது பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. ஆனால் அதே நேரத்தில் எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியதை அடுத்து ஒரு மாத காலத்திற்கு தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் தற்போது எஸ்வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீடு மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை எஸ்.வி சேகர் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.