சென்னை மெரீனாவில் தொடரும் சோகம்: கடலில் மூழ்கி மாணவர் பலி

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

சென்னை மெரீனாவில் கடலில் அதிக தூரம் சென்று நீந்தி குளிக்க வேண்டாம் என பலமுறை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் ஆர்வ மிகுதியால் இளைஞர்கள் சிலர் ஆழ்கடல் வரை சென்று எதிர்பாராத வகையில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த எட்டு பேர் மெரீனாவுக்கு வந்துள்ளனர். அவர்களில் மூவர் மட்டும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ராட்சச அலை ஒன்று அவர்களை இழுத்து சென்றது. இதில் மூவரும் காணாமல் போன நிலையில் ஒரு மாணவரின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மீதி இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர்களும் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்,

இதுகுறித்த விசாரணையில் கடலில் மூழ்கியவர்கள் திருமுல்லைவாயிலை சேர்ந்த தினேஷ், திண்டிவனத்தை சேர்ந்த பரத்வாஜ் மற்றும் தர்மபுரியை சேர்ந்த ஜெயகீர்த்தி வர்மா ஆகியோர்கள் என்றும், இதில் தினேஷ் உடல் மட்டும் கரை ஒதுங்கியுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.