கேரளாவில் மீண்டும் கனமழை: வானிலை எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்
- IndiaGlitz, [Saturday,August 25 2018]
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் அம்மாநிலமே உருக்குலைந்து வெள்ளத்தால் சிறுசிறு தீவுகளாக மாறியது. தற்போதுதான் ஓரளவுக்கு வெள்ளம் வடிந்து மீட்புப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள வானிலை எச்சரிக்கையால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 'கேரளாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுமா? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
அதேபோல் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.