ஒருமுறை கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வருமா??? WHO என்ன சொல்கிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகில் பல நாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளவர்கள் இயல்பான வேலைகளுக்கு திரும்பலாம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் “நோய்எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான வைரஸ், பாக்டீரியா தொற்றுநோய்கள் மனித உடலில் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தால் அந்நோயை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றலை மனித நோய் எதிர்ப்பு மண்டலம் (ஆன்டி பாடிகளை) தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும். இதனால் மறுமுறை அவர்களுக்கு நோய்த்தொற்று வராமல் தடுக்கும் ஆற்றலை மனித உடல் கொண்டிருக்கும் என்ற மருத்துவக் காரணிகளை கொரோனா விஷயத்திலும் உலக நாடுகள் நம்பிவருகின்றன. இந்நம்பிக்கை உறுதிச்செய்யப் படாதது எனத் தற்போது உலகச் சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து WHO “கொரோனா வைரஸ் கிருமிகள் மீண்டும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து இருக்கிறது. சில நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் (ஆபத்து இல்லாத சான்றிதழ்) என்பதற்கு அடையாளமாக சில தனிநபர்களை வேலைகளுக்கு அனுப்பவும் பயணிக்க அனுமதிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்து தற்போது உலகச் சுகாதார மையம் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டவர்கள் இரண்டாவது முறை தொற்று நோயில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள் எனச் சொல்வதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பெரும்பாலான நபர்களுக்கு 2-17 நாள் வரை நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகள் இருப்பது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நபர்களின் உடலில் ஆன்டி பாடிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து எந்த உறுதியான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே விரைவான நோய்எதிர்ப்பு பற்றிய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் WHO தெரிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ்க்கு எதிராக மனித உடல் உற்பத்தி செய்யும் ஆன்டி பாடிகளின் அளவை துல்லியமாக தீர்மானித்து இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் இக்கருத்து தெளிவுபெறும் எனவும் கூறப்படுகிறது.
உலக நாடுகள் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவந்தவர் என உறுதிசெய்யும் சோதனையில் கூட தற்போது அதிக தவறுகள் நடந்துவருகின்றன. அதாவது உடலில் நோய்க்கூறுகள் இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனையில் இல்லை எனத் தவறான முடிவுகள் காட்டப்படுகிறது. இப்படியிருக்கையில் ஒருவரை நோயில் இருந்து மீண்டுவிட்டார் என உறுதியாகச் சொல்லமுடியாது. எனவே நோயில் இருந்து மீண்டு வந்தவர்களும் குறிப்பிட்ட நாள் வரை தனிமையில் இருக்க வேண்டும் என WHO அறிவுறுத்துகிறது.
மேலும், நோய்எதிர்ப்பு பாஸ்போர்ட் என ஆதரவு தெரிவித்து ஒருவரை வெளியே அனுப்பினால் அவர் சுகாதார முறையை புறக்கணிக்கக்கூடும். எனவே புதிய கொரோனா வைரஸின் ஆன்டி பாடிகளுக்கான சோதனைகள் மற்றும் அதன் அளவு குறித்தும் மேலும் நம்பகமான ஆய்வுகள் தேவை என்று WHO தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக அம்மை போன்ற நோய்த்தொற்றுகளில் இந்தக் கருத்து வெற்றிப் பெற்றிருக்கிறது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றானது RNA வைரஸ் கிருமிகளாலானது. எனவே இதில் அக்கருத்துப் பொருந்தாமல் கூட போகலாம். அதுமட்மில்லாமல் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுவந்து, திரும்பவும் அவரை நோய் அண்டாமல் இருக்க தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க குறைந்தது 3 வாரங்களாவது எடுக்கும். ஆனாலும் கொரோனா வைரஸ் குறித்து கருத்துத் தெரிவிக்கின்ற நிபுணர் கொரோனா வைரஸின் தன்மையை இன்னும் மருத்துவ உலகத்தால் முழமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் நோய்எதிர்ப்பு பாஸ்போர்ட் குறித்து எங்களிடம் தெளிவான கருத்து எதுவும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக தென்கொரியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்ட 141 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது எனச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் உலக நாடுகள் நோய் எதிர்ப்பு பாஸ்போர்ட் என்ற முடிவுக்கு வரவேண்டாம். இதுகுறித்து முழுயைமான ஆய்வுத்தேவை. மற்ற கொரோனா வைரஸ் நோய்கிருமிகளில் இருந்து புதிய கொரோனா நோய் கிருமியின் தாக்கத்தைக் குறித்து முழுமையான ஆய்வுமுடிவுகள் பெறப்பட வேண்டியது அவசியம் என உலகச்சுகாதார ஆய்வு மையம் கருத்துத் தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments