சீனக் கப்பலில், சென்னைக்கு வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா இல்லை – தீர்ந்தது குழப்பம்
- IndiaGlitz, [Thursday,February 20 2020]
சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் ஊழியர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தாக்குதல் இருப்பதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப் பட்டு பரிசோதனை செய்யப் பட்டது. இந்த பரிசோதனையில் 2 பேருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
சீனாவில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு 18MV என்ற கப்பல் சென்னைக்கு, இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தது. இந்நிலையில் கப்பல் சென்னை துறைமுகத்தை அடைந்தவுடன், கொரோனா வைரஸ் அச்சத்தால் சென்னை சுகாதாரத்துறை அதிகாரிகள் கப்பலை தனிமைப் படுத்தினர். சென்னை துறைமுகத்தில் இருந்து சற்று தொலைவில் இந்தக் கப்பல் நிறுத்தப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தக் கப்பலில் மொத்தம் 19 பணியாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு நேற்று சுகாதாரத் துறை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த மருத்துவச் சோதனையில் இரண்டு பேருக்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. ஆனால் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. காய்ச்சல் இருந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் இரண்டு பேரையும் கப்பலுக்குள்ளாகவே தனிமைப் படுத்தி வைத்தனர். மேலும், அவர்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்தனர். இதனால் சீன கப்பலில் வந்தவர்கள் யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.