அணியில் இடம்பெற லஞ்சமா? உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மீதான பகீர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களின் தேர்வுக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படும் புகாரில் 3 உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சிக்கியிருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அன்ஷுல் ராஜ் கடந்த ஜுலை 9 ஆம் தேதி ஜார்ஜான் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் செக்யூர் கார்ப்ரேட் மேனேஜ்மண்ட் என்ற நிறுவனத்தின் தலைவர் அஷுடோஸ் போரா, சி.கே.நாயுடு தொடரில் ஹிமாச்சல பிரதேச அணிக்காக தன்னை விளையாட வைப்பதாகக் கூறி ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குத் தொடர்பாக செக்யூர் கார்ப்ரேட் நிறுவனத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் இதேபோல 18 வீரர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு கிரிக்கெட்டில் விளையாட அனுமதித்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மேற்கு வங்கத்தின் முன்னாள் அண்டர் 19 வீரர் தனிஷ் மிஷ்ராவும் இடம்பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஐபிஎல் வீரர் ஒருவரும் இந்த வழக்குடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் டெல்லி கிரிக்கெட் வாரிய முன்னாள் கணக்காளர் சஞ்சய் பரத்வாஜ் மற்றும் அருணாச்சல பிரதேச கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் நபாம் விவேக்கிற்கும் இந்த வழக்குத் தொடர்பாக விஷயத்தில் பண வர்த்தனை நடந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து டி20 கிரிக்கெட் லீக் தொடரில் வீரர்களை எடுப்பதற்காகத்தான் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது எனச் சந்தேகம் எழுப்பி இருக்கும் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பீகார் கிரிக்கெட் வாரியத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இளம்வீரர் எழுப்பிய லஞ்சப் புகாரில் ஐபிஎல் வீரர், உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் எனப் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.