அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக டிசம்பர் 11,12 ஆகிய இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பேரணி, ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த விதிமுறைகளை மீறினால் இந்தியத் தண்டனைச் சட்டம் 188 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தான்சானியா, இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்த இந்தியா திரும்பிய 48, 25, 37 வயதுடைய 3 பேருக்கு மும்பை நகரில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

மேலும் அதே மாநிலத்தின் பிம்ப்ரி சின்வாட் நகரில் தற்போது நைஜீரிய பெண்ணுடன் தொடர்புடைய 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் பாதிப்பு 17 ஆக அதிகரித்து உள்ளது.

மகாராஷ்டிராவைத் தவிர கடந்த வெள்ளிக்கிழமை குஜராத்தின் ஜாம் நகரில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் ஜிம்பாப்வேயில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் ராஜஸ்தானில் 9, குஜராத்தில் 3, டெல்லியில் 1, கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் இதுவரை இந்தியாவில் 32 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.