ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம்விட்ட வீராங்கனை? மனதை உருக்கும் காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வருஷக்கணக்கில் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்துக்கொண்டு, பல தியாகங்களைச் செய்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில நாடுகளுக்கு இந்த ஒலிம்பிக் பதக்கம் இன்றைக்கு வரைக்கும் வெறும் கனவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர், தான் பெற்ற வெள்ளி பதக்கத்தை போட்டி முடிந்த வெறும் 5 நாளில் ஏலத்தில் விட்டிருக்கிறார். அதற்கான காரணம்தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரேஜிக் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெறும் 2 செ.மீ இடைவெளியில் பதக்கத்தை தவறவிட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியில் இருந்தே வெளிவராத அவருக்கு அதற்குமேல் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்ட மரியாவிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு அதற்குப் பின்பு எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
இதோடு முடிந்திருந்தாலும் பரவாயில்லை. கடந்த 2018 வாக்கில் அவருக்கு எலும்பு புற்றுநோய் ஏற்பட்டு ஒட்டுமொத்த வாழ்க்கையும் சூனியமாகி இருக்கிறது. இனிமேல் விளையாடவே முடியாது என்றிருந்த நிலையில் தன்னுடைய கனவுகளுக்காக புற்றுநோயில் இருந்து வெளிவந்த அவர் தற்போது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
இவருடைய சாதனையைப் பார்த்த போலந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் திளைத்தனர். இந்த மகிழ்ச்சி வெறும் 5 நாளுக்குத்தான். அடுத்த 5 நாளில் தனது பதக்கத்தை ஏலம் விடப்போவதாக அறிவித்தார் மரியா.இதற்கு அவர் தெரிவித்த காரணம்தான் ஒவ்வொருவரையும் கலங்க வைத்திருக்கிறது.
மரியா, போலந்து நாட்டில் வசித்துவரும் 8 மாதக் குழந்தை ஒன்றிற்கு கடுமையான இதயக்கோளாறு இருப்பதாகவும் சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல வேண்டி இருப்பதாகவும் ஃபேஸ்புக்கில் தகவல் அறிந்துகொண்டார். இதற்குமுன்பு நேரில் பார்த்திராத அந்தக் குழந்தைக்கு உதவ முடிவெடுத்த மரியா உடனே தனது பதக்கத்தை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக நடைபெற்ற ஏலத்தில் அந்நாட்டை சேர்ந்த Zabaka எனும் வணிக நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுத்தது. கூடவே ஏலத்தில் எடுத்த மரியாவின் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்து “இது உங்களிடையே இருக்கட்டும்“ என தெரிவித்து இருக்கிறது. இந்தச் சம்பவத்தைப்பார்த்த ரசிகர்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் குழந்தையின் உயிருக்காக தன்னுடைய ஒலிம்பிக் பதக்கத்தை விட்டுகொடுக்க முன்வந்த மரியாவையும் ஏலத்தில் எடுத்த பதக்கத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்த Zabaka நிறுவனத்தையும் மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com